ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் மதன் ராஜா இன்று காலை வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் (தனி) தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மதன் ராஜா, இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.ஓட்டப்பிடாரம் தேர்தல் நடத்தும் அலுவலர் சுப்புலட்சுமி அவர்களிடம், மதன் ராஜா தனது வேட்புமனுவை முறையாக வழங்கினார். வேட்புமனுத் தாக்கலின் போது அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடனிருந்தனர்.
முன்னதாக, மதன் ராஜாவின் வேட்புமனுத் தாக்கலை அக்கட்சியின் தலைமை தடுத்து நிறுத்தியதாகப் பல்வேறு அரசியல் யூகங்கள் வெளியாகின. குறிப்பாக, திமுக முன்னாள் எம்.எல்.ஏ. சண்முகய்யா தவெக-வில் இணையக்கூடும் என்ற தகவல்களால் மதன் ராஜாவின் வேட்பாளர் தகுதி குறித்துக் கேள்விகள் எழுந்தன.இருப்பினும், இன்று அவர் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளதன் மூலம், ஓட்டப்பிடாரம் தொகுதியில் தவெக சார்பில் மதன் ராஜாவே களம் காண்பது தற்போது உறுதியாகியுள்ளது.


