குலசேகரன்பட்டினத்தில் 2 கோவில்களில் சிலை, பீடங்களை சேதப்படுத்தியவரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடிவருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் அனுகூலபுரம் சுந்தராட்சி அம்மன் பின்புறம் முனியாண்டி சுவாமி, பொன்இசக்கியம்மன் கோவில்கள் அடுத்தடுத்து உள்ளன. இந்த கோவில்களில் பாரதி நகரைச் சேர்ந்த முன்னடி மகன் பெருமாள் (60) பூஜை செய்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த கோவில்களில் பூஜை செய்வதற்கு அவர் சென்றார்.
அப்போது கோவில்களின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் உள்ளே சென்று, அம்மன் சிலை, சுவாமி பீடங்களை ஆயுதங்களால் சேதப்படுத்தி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அவர் குலசேகரன்பட்டினம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் அந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில், குலசேகரன்பட்டினம் அனுகூலபுரத்தை சேர்ந்த பால்ராஜ் மகன் மோகன் சார்லஸ் (38), தொழிலாளி. இவரது நண்பர் குலசேகரன்பட்டினம் பண்டக சாலை தெருவை சேர்ந்த தர்மராஜ் மகன் வேல்குமார் ஆகிய 2 பேரும் கோவில்களில் புகுந்து ஆயுதங்களால் சிலை, பீடங்களை சேதப்படுத்தியது தெரிய வந்தது. இதை தொடர்ந்து மோகன் சார்லஸை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது நண்பர் வேல்குமார் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடிவருகின்றனர்.


