
முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய கிளாச்சிட்டு நாவல்
விமர்சனம் – ஏ.சாந்தி பிரபு, எழுத்தாளர்.
கிளாச்சிட்டு நாவல்
முத்தாலங்குறிச்சி காமராசு
நாற்கரம் பதிப்பகம்
9551065500
சில வருடங்களுக்கு முன்பு கிளாக்குளம் பகுதியில் நடந்த உண்மை சம்பவமான புனிதாவிற்கு ஏற்பட்ட பாலியல் வன்முறையை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட கிளாச்சிட்டு என்னும் நாவல் பலரது நெஞ்சை உலுக்கும் நாவலாகும்.
“வளர்ந்து தாக்குப் பிடிக்க முடியாமல் வர்ற நவீனயுகத்தில் நொறுக்கப்பட்டவள் நான்” என்று சிட்டுக்குருவி தன்னைத் தானே அறிமுகம் செய்யும் இடத்திலும் சரி “இனி வருங்கால பெண்களுக்கு இந்த மாதிரி சம்பவம் ஏற்பட கூடாதுன்னு இந்தக் கதையை உங்கக் கிட்ட சொல்லுதேன்” என்று வட்டார வழக்கில் சிட்டுக்குருவி பேசும் போதே இந்த நாவல் நவீன கோணத்தில் நகர்கிறது. பூக்கும் முன்பே கசங்கி போன ஒரு பூவின் கதைக்குள் தாமிரபரணி ஆற்றின் நிலைமையையும், சிட்டுக்குருவியின் மூலமாக நாவலில் சாடியுள்ளார் எழுத்தாளர். தாமிரபரணியின் தற்காலிக நிலையையும் பற்றி எழுதி, நமது மனதிற்குள் ஆழமாக நிறைய தகவல்களை சிறகடிக்க வைத்துள்ளார். இந்தக் கதையை பொருத்தமட்டில், புவனாவிற்கு ஏற்படப் போகிற கொடுமையை சிட்டுக்குருவி முன்னதாகவே யூகித்திருப்பதைப் போல எழுதியிருக்கும் இடங்களில், நமக்கும் புத்தகத்திற்குமான இடைவேளை மிகவும் சுருங்கத் தொடங்குகிறது. அடுத்தக் கட்டம் இறுக்கமான மனதுடன் நடக்க இருப்பது என்னவாக இருக்கும் என சிட்டுக்குருவி விவரிக்கும் என யூகிக்கிற இடங்கள் படிப்பவர்களை பதை பதைப்புக்குள் ஆக்குகிறது. புவனாவின் இறப்பினை விவரிக்கும் போது ‘கல் மனமும் கசிந்து விடுகிறது.
புவனாவை கொடூரமாக கொலை செய்தவனை தண்டிக்க வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெறும்போது, சிட்டுக்குருவியும் அந்த போராட்டத்தில் கலந்துகொள்கிறது. அப்போது செல் அலைவரிசையில் தனது உயிர் போய் விடும் நிலை. அந்த வேளையில் “உயிரு தானே நம் அக்காளுக்காக போகட்டும்”. என்ற வரிகள் கண்களில் கண்ணீரை நிச்சயம் வரவழைத்துவிடும். புவனாவின் உடலை அடக்கம் செய்ய கொண்டு வரும் போது, “யக்கா. நீ இப்போ எப்படி வரப் போறியோ உன்னை சிங்காரமாகப் பார்க்கனுமுன்னு நினைச்சோமே இப்போ. நீ சவப் பெட்டியில வரப்போறீயே” என்று கதறும் இடங்களில் மனதை உருகச் செய்கிறது.
சிட்டுக்குருவி இறந்த பிறகு அதை குப்பை தொட்டியில் எரிவார்கள். அப்போது சிட்டுக்குருவி, “அக்காளையாவது அடக்கம் செய்தார்கள். என்னை இப்படி குப்பை தொட்டியில் எரிந்துவிட்டார்களே” என அங்கலாய்க்கும் போது ஆசிரியர் வேறு பரிணாமம் எடுத்து இருக்கிறார்.
இந்த ஒட்டு மொத்த சமூகத்தினை கண்டு மனம் வெதும்பி எழுதியிருக்கும் ஆசிரியருக்கு சமூகத்தின் மீதிருக்கும் உண்மையான அக்கறையும், பொறுப்புணர்ச்சியும் தெளிவாகப் புலப்படுகிறது.
மொத்தத்தில் கிளாச்சிட்டு சமூகத்தின் அவலநிலைகளை வெளிப்படுத்தும் ஒரு கண்ணாடி என்பதில் சிறிதும் ஐயமில்லை.
ஒரு சம்பவத்தினை வைத்து ஒட்டு மொத்த சமூகத்தின் அபலைபெண்களின் நிலையை உணர்த்தி இருக்கும் ஆசிரியரின் இந்த நாவல் வேறு ஒரு பரிணாமம்.
ஏ.சாந்தி பிரபு, எழுத்தாளர்.
தூத்துக்குடி -628004 7603990502