தென்மாவட்டங்களில் கடந்த டிசம்பர் மாதம் 17 மற்றும் 18 ஆம் தேதியில் கொட்டித் தீர்த்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ரயில் தண்டவாளப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதில் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கால் மண் அரிப்பு ஏற்பட்டு ரயில் தண்டவாளங்கள் அந்தரத்தில் தொங்கியது. இதனால் ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.
திருநெல்வேலி திருச்செந்தூர் இடையே உள்ள தாதன்குளம், ஆழ்வார்திருநகரி பகுதியில் ரயில்பாதை முற்றிலுமாக சேதமடைந்தது. இதன் காரணமாக இந்த வழித்தடத்தில் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டது.
இதனிடையே சேதமடைந்த ரயில் பாதைகள் அனைத்தும் முழுமையாக சீரமைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து 20 நாட்களுக்கு பிறகு இன்று காலை சோதனை ஓட்டம் நடந்தது.
ரயில்வேயின் தலைமை பொறியாளர் பென்னி ஆய்வு செய்தார். பின்னர் சோதனை ஓட்டம் நடந்தது. இதனைத்தொடர்ந்து இன்று இரவு முதல் வழக்கம் போல செந்தூர் விரைவு ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருநெல்வேலியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள செந்தூர் விரைவு ரயில் மாலை 5 மணிக்கு திருச்செந்தூருக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து வழக்கம் போல இயங்கும் என ரயில்வே நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. 20 நாட்களுக்கு பிறகு இன்று இரவு 8:20 மணிக்கு திருச்செந்தூரிலிருந்து செந்தூர் விரைவு ரயில் புறப்பட்டு திருநெல்வேலி வழியாக வழக்கம் போல இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் இயங்கும் அனைத்து ரயில்களும் 60 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டும் தான் இயங்கும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே 110 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்கள் இயங்கியது குறிப்பிடத்தக்கது.
மேலும் நாளை முதல் திருச்செந்தூர் திருநெல்வேலி வழித்தடத்தில் இயங்கும் அனைத்து பயணிகள் ரயில், விரைவு ரயில் வழக்கம் போல இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களுக்கு பின்னர் திருநெல்வேலி திருச்செந்தூர் ரயில் பாதையில் ரயில்கள் இயக்கபட உள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


