தமிழகத்தில், ‘வேட்டி நாள்’ என்பது வேட்டி கட்டுவதை இளைஞர்களிடம் ஊக்குவிக்கும் விதமாக ஜனவரி மாதம் 6–ந்தேதி கொண்டாடத் துவங்கியுள்ளனர் இதைத் துவக்கியது யார் என்பதில் சரியான கருத்தொற்றுமை இல்லை. கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் செயல் இயக்குநராக இருந்த சகாயம் ஐ. ஏ. எஸ். பொங்கலை ஒட்டி ‘வேட்டி தினம்’ கொண்டாடுவோமே என ஆலோசனை சொன்னார்.பள்ளிகள், கல்லூரிகள், மற்றும் அலுவலகங்களில் வேட்டி கட்டிக்கொண்டு தங்களின் வேட்டி தினத்தைக் கொண்டாடினர். 2015 சனவரி ஆறாம் நால் ‘வேட்டி தினம்’ என்று அறிவிக்கப்பட்டுக் கொண்டாடப்படுகிறது.
தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டியைக் கட்டிக்கொண்டு உள்ளே நுழைய சில கிளப்புகளில் அனுமதி மறுப்பதாக சர்ச்சை ஏற்பட்டது. அதன்பிறகு தமிழக அரசு வேட்டிகட்டி வரக்கூடாது என்று தடைவிதிக்கும் கிளப்புகளின் உரிமம் இரத்து செய்யப்படும் என்று சட்டம் இயற்றியது.
வேட்டி என்பது ஆண்கள் உடுத்தும் ஆடையாகும். இது உடம்பின் கீழ்ப்பாகத்தில் அதாவது இடுப்பில் உடுத்தப்படுகின்றது. இது செவ்வக வடிவில் இருக்கும், பொதுவாகத் தமிழக மக்கள் வெண்ணிற வேட்டியை மட்டுமே உடுத்தி வருகின்றனர். முகமதியர்கள் வந்த பிறகே இது வண்ண வேட்டியாக மாறியது. இதை கைலி, லுங்கி அல்லது சாரம் என்று அழைக்கின்றனர். வெண்ணிற வேட்டி தமிழர்களின் பாரம்பரிய உடையாகும். பெரும்பாலும் யாரும் தினமும் வேட்டி அணிவதில்லை. முக்கிய விழாக்களில் மட்டுமே அணிகின்றனர்.
தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அனைவரும் அணியும் ஒரு சாதாரண உடையாக வேட்டி இருந்து வருகிறது. இந்தியா மட்டுமின்றி இலங்கை, வங்காள தேசம் மற்றும் மாலத் தீவுகளிலும் வேட்டி பயன்பாட்டில் உள்ளது. முக்கிய விழாக்களின் போது, பாரம்பரிய உடையான வேட்டியை அணிவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அரசியல்வாதிகள், முக்கியப் புள்ளிகள், சமுதாய மற்றும் பண்பாட்டு ஆர்வலர்கள் வேட்டியை அன்றாடம் பயன்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாகத் திருமணம் போன்ற முக்கிய நிகழ்வுகளில் வேட்டி அணிவதை ஒரு பாரம்பரிய வழக்கமாக தென்னிந்தியாவில் உள்ள பெரும்பாலானோர் கடைப்பிடித்து வருகின்றனர்.


