அ.இர.ரகுமான். பிறப்பு: 6 சனவரி 1967. புகழ் பெற்ற இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்தி, தமிழ், ஆங்கிலம் போன்ற பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல் என அழைக்கப்படுகிறார். ஆஸ்கார் விருது, கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது , தேசியத் திரைப்பட விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றவர். ஹாலிவுட் திரைப்படமான ஸ்லம் டாக் மில்லியனியர் என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக ஆஸ்கார் விருதுகளை வென்றிருக்கிறார். மேலும் இத்திரைப்பட இசைக்காக இவருக்கு 2008 ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருதும் , பாஃப்டா விருதும் கிடைத்தன. இவ்விரு விருதுகளைப் பெற்ற முதலாவது இந்தியரும் இவரேயாவார். இவருக்கு 2010-ஆம் ஆண்டில் இந்திய அரசின் பத்ம பூசண் விருது அளிக்கப்பட்டது. இவர் ஆசியாவின் மொசார்ட் என்றும் அழைக்கப்படுகிறார். 2009 ஆம் ஆண்டு 81ஆம் ஆஸ்கார் விருதுகளுக்காக அமைத்த மாபெரும் மேடையில் இவரது தாய் மொழியான தமிழில் ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’ என்று இவர் அடிக்கடி உச்சரிக்கும் மந்திரச் சொல்லைப் பாடினார். 2017 ஆம் ஆண்டு இவருக்கு தமிழ் ரத்னா விருது வழங்கி அமெரிக்கா தமிழ் சங்கம் கவுரவித்துள்ளது. இவர் மேற்கத்திய இசைக் கருவிகளை கையாளும் திறன்படைத்த மாஸ்டர் தன்ராஜிடம் மேற்கத்திய இசையைப் பயின்றவர்.


