திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் கேரள பக்தர்கள் காவடி எடுத்தும், பூக்குழி இறங்கியும் வேண்டுதலை நிறைவேற்றினர்.
உலக நன்மைக்காகவும், இயற்கை சீற்றத்திலிருந்து நாடு காக்கப்படவும், மக்கள் நோய் நொடிகள் நீங்கி நலம் பெறவும் வேண்டி ஆண்டுதோறும் கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் 41 நாள்கள் விரதமிருந்து திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரைப் பகுதியில் பூக்குழி இறங்கி வழிபாடு நடத்துவது வழக்கம்.
அதன்படி, திருவனந்தபுரத்தை சேர்ந்த சோமன் சுவாமிகள் தலைமையில் 16 பக்தர்கள் திருச்செந்தூர் சிவன் கோயில் முன்பிருந்து மேளதாளங்கள் முழங்க காவடி, பன்னீர்-பால்குடங்களுடன் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரைக்கு ஊர்வலமாக வந்தனர். அங்கு சிறப்பு பூஜைகளுக்குப் பின்னர், அவர்கள் பூக்குழி இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினர்.
அப்போது, திருச்செந்தூர் பகுதி பொதுமக்கள், முருக, ஐயப்ப பக்தர்கள் கடற்கரையில் திரண்டிருந்தனர். பாதுகாப்புப் பணியில் தீயணைப்பு-மீட்புப் பணிகள் துறையினர், காவல் துறையினர் ஈடுபட்டனர்.


