முன்னீர்பள்ளம் கோயில் கல்வெட்டுகளில் எல்லாம் ஸ்ரீ உத்திர சொக்க விநாயகர் நல்லாசியுடன் என்று குறிப்பிட்டுள்ளனர். அதைப் பற்றிய தகவல்களை நமது கவுன்சிலர் செல்வ சங்கரிடம் கேட்டோம். அவர் கூறும் போது, “இந்த ஊரை உருவாக்கி, இங்கே சிவன், பெருமாள் ஆலயம் அமைக்கும் போதே இந்த உத்திர சொக்க விநாயகர் உருவாக்கி விட்டார்.
இதனால் இவர் ஆதியில் வந்தவர். எனவே தான் முன்னீர் பள்ளத்தினை பொறுத்தவரை எந்த பணி செய்தாலும் உத்திர சொக்க விநாயகர் நல்லாசியுடன் எனத்தான் முன்னோர்கள் துவங்குவார்கள். அதைத்தான் நாங்களும் தொன்று தொட்டு செய்து வருகிறோம்” என்றார்.
வீரபாண்டிசெல்லாயி அம்மன் கோயில் பூசாரி சங்கரலிங்கம் அவர்களுக்கு சிலை வைத்து வணங்கிய பின் அவர் காலத்துக்கு பின்னே யார் யாரெல்லாம் பூசாரி இருந்தார்கள் என செல்வ சங்கர் பட்டியலிட்டார்.
அந்த வரலாற்றை தொடரலாம்.
சங்கரலிங்கம் அய்யாவுக்கு 4 ஆண் குழந்தை 8 பெண் குழந்தைகள். அதில் பலவேசத்தேவர் என்பருக்கு முதலில் செல்லாயி அம்மன் வந்திறங்கினார். தொடர்ந்து அவரது தம்பி பிச்சகண்ணு தேவருக்கு சாமி அருள் வந்தது. இவர் காலத்துக்கு பிறகு பலசேவத் தேவரின் மகன் சங்கரலிங்கத் தேவருக்குத்தான் சாமி வரும் என அனைவரும் எதிர்பார்த்து இருந்தனர். அந்த சமயத்தில் தான் செல்வ சங்கரின் தந்தையும், பிச்சகண்ணு தேவர் மகனுமான மற்றொரு சங்கரலிங்க தேவருக்கு சாமி வந்து இறங்கி அருள் ஆசி புரிய திருவிளையாடல் ஒன்றை செய்தார்.
அந்த வேளையில் இவர் நாகர்கோயிலில் தானுண்டு தன் வேலையுண்டு என இருந்தவர். ஆனாலும் சாமி அருளை பெற்று தன் கடமையை செய்து வருகிறார். இந்த சமயத்தில் தான் இந்த ஊரைச்சேர்ந்த யாதவர் பெண்மணி ஒருவரிடம் சிரசில் சுவாமி இறங்கி, “கலைப் படாதே தொடர்ந்து 10 மாதத்தில் ஒரு மகன் உனக்கு பிறப்பான். அவன் 20 வயதில் வீரபாண்டி செல்லாயி அம்மனை சுமப்பான்” என்று கூறினாள்.
அந்த காலகட்டம் 1976 . அதே போல் தைமாதம் செல்வ சங்கர் பிறந்தார். இதற்கிடையில் இவரது தந்தை மனநிலை பாதிக்கப்பட்டவர் போலவே ஆகி விட்டார். அவரை நோயில் இருந்து காப்பாற்ற பாளை அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அந்த சயத்தில், சேர்த்தவர்கள் வீட்டுக்கு வரும் முன்பே அவர் வந்து சேர்ந்து விடுவார். அதோடு மட்டுமல்லாமல் அவர் செய்யும் கூத்து மற்றவர்கள் மத்தியிலும் உறவினர்கள் மத்தியிலும் பெரும் அவதியை ஏற்படுத்தியது.
இந்த வேளையில் தான் முன்னீர் பள்ளத்தில் வேலு ஜோதிடர் என்பவர் வாழ்ந்து வந்தார்.
இந் ஜோதிடர் மிகவும் விசேசமானர். சந்திரலேகா என்னும் சேரன்மகாதேவி சப் கலெக்டர் ஒருவர் இருந்தார். சுப்பிரமணிய சுவாமி கட்சியில் முக்கியமானவர் சந்திரலேகா. இவர் அந்த காலத்தி லேயே அரிசியை கேரளாவுக்கு கடத்தியதை தனி மனிதராக நின்று நிறுத்திவர். மிகவும் மதிக்கத்தக்க அதிகாரியாக பணிபுரிந்தவர். இவர் பிறகும் முன்பே இவரது ஜாதகத்தினை கணித்து, இதுபோன்ற ஒரு பெண் பிறப்பார். இதே ஊரில் அவர் ஆட்சியராக களம் இறங்குவார், என ஆருடம் சொன்னவர் வேலு ஜோதிடர். சேரன் மகாதேவி சப் கலெக்டராக சந்திரலேகா பதவியேற்ற போது கூட வேலு சோதிடரை பார்த்து ஆசி பெற்று சென்றதாக கூறுகிறார்கள் இவ்வூர் மக்கள்.
இந்த ஜோதிடரிடம் தான் சங்கரலிங்க தேவரை கூட்டி வரு கிறார்கள். அவர் வீட்டுக்குள் வரும் முன்பே ஜோதிடர் கூறிவிட்டார். இவர் சிரசில் அம்மன் அருளாட்சி இருக்கிறது. எனவே இங்கே கூட்டி வராதீர்கள். கோயிலுக்கு கூட்டி ச்செல்லுங்கள் என்றார். அதோடு மட்டுமல்லாமல் அவர் ஒரு கட்டளையும் இட்டார். அதன்படி “நிறை குடம் ஒன்றில் தண்ணீரை எடுத்துக்கொள்ளுங்கள், அதில் ஒரு செம்பு தண்ணீரை இவருக்கு குடிக்க கொடுத்து, வாழைப்பழம் ஒன்றை சாப்பிட கொடுத்து அதன் பின் கூட்டிச்செல்லுங்கள்” என கூறினார்.
அதுபோலவே உறவினர்கள் செய்தனர்.
அந்த சமயத்தில் இரண்டு சங்கரலிங்க தேவரும் கோயில் வளாகத்தின் அம்மன் முன்பு நின்றனர். ஆனால் வீரபாண்டி செல்லாயி அம்மன் செல்வ சங்கரின் தந்தையின் சிரசில் வந்து அருளாசி வழங்க ஆரம்பித்தார்.
இதற்கிடையில் செல்வ சங்கர் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளந்து வருகிறார்கள். பெரும்பாலுமே இவரை வளர்த்தது, பாளை இலந்த குளத்தில வசிக்கும் இவரது தாய்மாமன் சிதம்பரதேவர் மற்றும் அக்கள் வேலம்மாள் தம்பதியினர் தான். ஆனாலும் சொந்த ஊருக்கு வந்தால் அவர் நண்பர்களோடு விளையாட்டுப்பிள்ளையாகவே வாழ்ந்து வந்தார்.
இந்த வேளையில் தான் இந்த ஊரில் உள்ள யாதவர் சமுதாய மக்கள் கோயில் கொடை விழா வந்தது. இதற்கு தீர்த்தம் எடுத்து தர செல்வ சங்கரின் தந்தை சங்கரலிங்க தேவரை அழைத்து நின்றனர் அவ்வூர் மக்கள்.
ஆனால் கொஞ்ச காலமாகவே சங்கரலிங்க தேவருக்கு கண் பார்வை மங்கியிருந்தது. கிட்டத்தட்ட அருகில் உள்ளவர்களை கூட சரிவர பார்க்கத் தெரியாது. எனவே அவர் தயங்கி நின்றார். இந்த வேளையில் அங்கு வந்த செல்வ சங்கரும், “என் தந்தையை கூப்பிடாதீர்கள்” என கறாராக கூறிவிட்டார்.
இதனால் என்ன செய்வது என்று அறியாமல் விழா கமிட்டி யினர் கோயில் வேலைகளை செய்து கொண்டிருந்தனர். எப்படியாவது அம்மன் அருள் செய்வார் என்பது அவர்களது நம்பிக்கை. இதற்கிடையில் இலந்த குளம் வந்து விட்டார் செல்வ சங்கர்.
யாதவர் பெண் சொன்ன 20 வது வருடம் சரியாக முடிந்து விட்டது. அவள் அந்த பெண் வாக்கின் படி அம்மன் செல்வ சங்கர் சிரசில் இறங்க வேண்டும். ஆனால் விளையாட்டு பிள்ளையாக யார் சொல்வதையும் கேட்காமல் அலைந்து கொண்டிருந்த செல்வ சங்கரோ தனது தாய் மாமன் வீட்டில் இலந்த குளத்தில் அமர்ந்திருக்கிறார்.
ஆனால் அம்மன் சும்மா இருப்பாரா என்ன? அதுவும் முன்னீர் பள்ளம் வீரபாண்டி செல்லாயி அம்மன் சாதரண ஆளா? அவள் தனது ஆளுகைக்குள் செல்வ சங்கரை கொண்டு வர அற்புதம் ஒன்றை நிகழ்த்தினாள்.
அந்த அற்புதம் என்ன?
(நதி வற்றாமல் ஓடும்)


