தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மீனவ கிராமங்களில், மீன்வள கணக்கெடுப்பு பணி தொடங்கியது. இதில் மீனவர்களுக்கான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.
தேசிய கடல் மீன்வள கணக்கெடுப்பு பணி இந்தியா முழுவதும் கடலோர மாவட்டங்களில் உள்ள மீனவ கிராமங்களில், மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இந்திய மீன்வள கணக்கெடுப்பு நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்துகிறது. மீனவர்களுக்கான நலத்திட்டங்கள், மீன்வளத்துறையின் வளர்ச்சி ஆகியவற்றுக்கு அடிப்படை ஆதாரமாக இந்த கணக்கெடுப்பு பணி அமையும் என்று கூறப்படுகிறது.
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் மத்திய கடல் மீன்வள ஆாய்ச்சி நிலைய ஊழியர்கள், பயிற்சி பெற்ற மீனவர்கள் நேற்று தூத்துக்குடி இனிகோநகர் உள்ளிட்ட பகுதிகளில் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த கணக்கெடுப்பின் போது மீனவர்கள் எந்த வகையான மீன்பிடிப்பில் ஈடுபடுகிறார்கள், எந்த வகையான படகு மூலம் தொழில் செய்கிறார்கள், என்ன வலை பயன்படுத்துகிறார்கள், மீன்பிடி இறங்குதளம் உள்ளதா, மீன்பிடி துறைமுகங்கள், மீனவ கிராமங்களில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகள், மீனவ கிராமங்களில் மீனவர்களுக்கு தேவையான மீன் பதினிடும் தொழிற்சாலை வசதி உள்ளதா, ஐஸ்கட்டி தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளதா, மீன்பிடி படகுகள் கட்டும் தளம் உள்ளதா, மீனவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் உள்ளதா போன்றவை கணக்கெடுக்கப்பட்டன.
இதில் சுமார் 170 கேள்விகள் கேட்கப்பட்டு விரிவான விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் இந்த கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது.


