முன்னீர்பள்ளம் கவுன்சிலர் செல்வ சங்கர் வீரபாண்டி செல்லாயி அம்மன் வரலாற்றை நம்மிடம் கூற ஆரம்பித்தார். அவரிடம் வரலாறு கேட்கும் «ப்£தே நமக்கு சந்தோசமாக இருந்தது. ஏன் என்றால் அவர் தான் அந்த கோயிலின் அம்மன் கொண்டாடி. அவரே அம்மனின் கதையை கூறினால் நமக்கு நன்றாக இருக்கும் அல்லவா? எனவே தான் அவரிடம் அம்மனின் வரலாற்றை கேட்டேன். அவரும் அருமையான அந்த வரலாற்றை நம்மிடம் கூறினார்.
இதற்கிடையில் கவுன்சிலர் செல்வ சங்கரை பற்றி ஒருசில வார்த்தை இவ்விடத்தில் கூறுவது நலமென நினைக்கிறேன். ஏன் என்றால் ஒரு வார்டுக்குள் தொடர்ந்து கவுன்சிலராக வருவது என்பது கடினம். அதுவும் அரசியல் கட்சிகள் மாறி மாறி வரும் கால கட்டத்தில் இவர் சுயேட்சையாக போட்டியிட்டு தொடர்ந்து ஜெயித்து வருகிறார் என்றால் எவ்வளவு சிறப்பானவர். மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்து வருவதால் தானே தொடர் வெற்றி கிடக்கிறது. நான் ஊருக்கு சென்று செய்தி திரட்டும் போது எங்களிடம் பேசியவர், இரண்டாம் முறை சந்தேகம் கேட்ட போதும் சலிக்காமல் பதில் கூறினார்.. அந்த சமயத்தில் அவர் பசும்பொன்னுக்கு தேவர் ஜெயந்தி விழாவிற்கு சென்று விட்டு காரில் திரும்பி வரும் போது என்னிடம் ஊர் வரலாற்றை பேசிக்கொண்டே வந்தார். இந்த அளவுக்கு அவர் ஊர் ஆர்வலாக இருக்க போய்தான் என்னை போன்ற களப்பணி எழுத்தாளர்களுக்கு கிராமத்து வரலாறு முறையாக எழுத முடிகிறது. இதில் கூடுதல் சிறப்பு என்ன வென்றால் கோபால சமுத்திரத்தில் நமக்கு அனைத்து உதவிகளையும் செய்த சங்கிலி பூத்தாரின் கோமரத்தாடி மாரிபாண்டியன் இவருக்கு நண்பர் என்றார். அவரும் நானும் ஏற்கனவே சிங்கம்பட்டி ஜமீன்தாருக்கு சென்னையில் மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு அரசை தொடர்ப்பு கொண்டு செல்பவர்கள். ஆகவே எனக்கு கூடுதல் சந்தோசம். நல்ல நண்பர்கள் உதவி நமக்கு இருக்கிறது என்பதே நமக்கு பெருமைதான். சரி வரலாற்றுக்குள் செல்வோம்.
உங்களுக்கெல்லாம் தெரியும் முன்னீர் பள்ளம் என்ற பெயர் வருவதற்கு காரணம் பரிபூரண ஈஸ்வரர் கோயிலின் தலபுராணத்தில் கூறிய வரலாறுதான். படிக்காத வாசகர்களுக்காக முன்னுரையாக அந்த வரலாற்றை மீண்டும் கூறுகிறேன்.
பாஞ்சால நாட்டில் சூரியக் குல மதுராந்தகன் என்னும் மன்னன் ஆட்சி புரிந்து வந்தான். நல்ல நீதிமான். தானங்களைச் செய்பவன். ஆனால் நதிதேவதைகளை மதிப்பதும் இல்லை. எனவே குலகுருவாகிய கன்வமகரிஷி பாவப் புண்ணியப் பலன்களைப் பற்றியும் ஜல தானத்தின் மகிமைகளையும் எடுத்துக் கூறினார். மன்னன் கேட்கவில்லை. தண்ணீர் தானம் செய்ய அவசியம் இல்லை என மறுத்து, மற்ற தானங்களைச் செய்தான். அவன் அடுத்த ஜென்மத்தில் பல்லியாகப் பிறந்தான். ராஜமாளிகையில் பூச்சிகளைப் தின்று கழித்தான். அந்த மாளிகை வணிகரைக் காண கன்வ மகரிஷி வந்தார். அவரை வணிகர் வரவேற்று பாதங்களை நீரால் கழுவினார். அப்போது நீரில் சிதறிய நீர்துளி பல்லியின் மீது பட்டது.
பல்லி உருவில் இருந்த மதுராந்தகன் மனிதக் குரலில் முனிவரிடம் கெஞ்சினான், ‘மகரிஷியே என்னைக் காப்பாற்ற வேண்டும்’ . உடனே கன்வ மகரிஷி பல்லி வடிவில் இருப்பது மதுராந்தகன் என்பதை உணர்ந்தார். ‘மன்னா உனக்குப் பலமுறை ஜலத்தில் பெருமைகளை எடுத்துரைத்தேன். அதிக அளவு மற்ற தானம் செய்திருந்தாலும் ஜலதானம் செய்ய ஏரிகுளங்களை அமைக்க வில்லை. ஆனாலும் நீ மன்னிக் கப்பட வேண்டியவன். பல்லியான உன்னை ஒரு சந்தனப் பேழையில் வைத்து தென்திசை அனுப்புகிறேன். அங்கு தாமிரபரணி தீர்த்தத்தில் உனக்கு மனித உருவமும் ஞானமும் கிடைக்கும்’ என்று கூறினார்.
தென்திசை வந்தப் பல்லி அங்கும் இங்கும் அலைந்து கடைசியாகத் தாமிரபரணிக் கரையில் உள்ள முன்னீர்பள்ளத்தை அடைந்தது. அங்கு தபசிகள் கூடி தாமிரபரணிக்கு புஷ்கரணி,யாகம் நடத்திக் கொண்டிருந்தனர். இதைக் கண்ட பல்லி சந்தோஷ மிகுதியில் அங்கிருந்தத் தபசியின் கமண்டல நீரில் விழுந்தது. தபசி கோபத்தில் கமண்டலத்தைத் தமிரபரணியில் வீசினார். அங்கு விழுந்த பல்லி அழகான மனிதனாக (மதுராந்தகன்) மாறியது.
அனைவரும் ஆச்சரிய முற்றனர். அதன் பின் மதுராந்தகன் பலகாலம் தங்கிச் சிவபெருமானை வழிபட்டு தீர்த்த நீராடி ஜலதானம், பானகம் மோர் போன்றவைகளைத் தானம் செய்தான்.
முன்னீர்ப்பள்ளம் கிராமம் கி.பி.1120&22 ஆண்டுகளில் “ஜெயசிங்க நாட்டு கீழ் களக் கூற்றம்” என்ற பெயரால் அழைக்கப்பட்டது. ஸ்ரீ வல்லபன் என்ற மன்னன், மாறவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி பராக்ரம பாண்டியன் ஆகிய இருவரும் சிற்றரசர்களாய் ஆண்ட காலத்தில் சிறப்புடன் விளங்கியது. பின்னர் 1544&ல் விஜயநகர மன்னன் அச்சுதராயரின் காலத்தில் மூன்று நீர்ப்பள்ளம் என விளங்கிய இத்தலம் தற்போது முன்னீர்ப்பள்ளம் என்றழைக் கப்படுகிறது.
ஸ்ரீவல்லபமன்னன் ஆண்ட காலத்தில், தன் சொந்த வழிபாட்டுக்கென ஒரு சிவலிங்கம் செய்து தர ஒரு சிற்பியை நியமித்தார். சிற்பி முறையாகச் சிவலிங்க மொன்றைச் செய்தார். அப்போது அங்கே வந்த ஆண்டி, அந்த லிங்கத்தைத் தரும்படி கேட்டார். சிற்பி தரமறுத்து விட்டான். பொதிகை மலை போய்விட்டு வந்த ஆண்டி மீண்டும் லிங்கத்தினைக் கேட்டார். மீண்டும் மறுத்தார் சிற்பி. ஆண்டி கையில் கொண்டு வந்திருந்த மூலிகைச் சாற்றை இரண்டு சிவலிங்கங்களின் மீதும் வீசி எறிந்தார். லிங்கங்கள் தீப்பிழம்பு களாகி எரிந்தன. பயந்து போன சிற்பி, மன்னனிடம் தெரிவிக்க, மன்னன் ஆண்டியை மிரட்டினார். “சிற்பியால் உருவாக்கப்பட்ட இரண்டு சிவலிங்கக் கற்களிலும் தேரை குடி கொண்டிருப்பதால் பூஜைக்குரியதன்று” என ஆண்டி கூற, அனைவரும் தவறை உணர்ந்தனர். பின் அவரையே லிங்கம் செய்து தர கூறினர்.
ஆண்டியும் மனமகிழ்ந்து, ஆற்றுநீர், ஊற்றுநீர், வேற்றுநீர், ஆகிய மூன்று நீர்நிலை உள்ள இடங்களிலும் மூன்று லிங்கங்களைத் தோற்றுவித்து மன்னனிடம் ஒப்படைத்து விட்டு மறைந்தார்.
“ஆண்டியாக வந்தது சிவனே” என அறிந்தான் மன்னன். மனமகிழ்ந்து, ஒன்றைத் தன் வழிபாட்டுக்கும், இரண்டாவதை முன்னீர்ப் பள்ளத்திலும், மூன்றாவது தருவை என்ற ஸ்ரீவல்லப நகரிலும் ஸ்தாபனம் செய்தார். இரண்டு இடங்களிலும் கோயில்களைக் கட்டி கும்பாபிஷேகமும் செய்தார்.
சிவனும், முன்னீர்பள்ளத்தில் பரிபூர்ண கிருபேஸ்வரராகவும் தருவையில் வல்லப பாண்டீஸ்வரராகவும் அருளாட்சி செய்யத் தொடங்கினார். சரியானபடி கல் தேர்வு செய்யத் தவறிய சிற்பி சாபத்தால் பல்லியாக அம்பாள் கோயிலில் இருந்தான். பின்னர் கி.பி.1554&ல் விஜயநகர மன்னன் அச்சுதராயர் அனுப்பிய மல்லப்ப நாயக்கர், அருகிலிருக்கும் ஊர்களிலிருந்து 87 அந்தணர்களைக் குடியமர்த்தி, லஷ்மி நாராயணப் பெருமாள் கோயிலைக் கட்டி அக்ரகாரம் அமைத்து, நில மான்யங்களை ஏற்படுத்தி, நீர் வசதிக்காகக் கால்வாய்களை அமைத்தார். இதனால் இவ்வூர் மல்லப்புரம் என்றழைக்கப்பட்டதாகவும் கூறுவர். கவுன்சிலர் செல்வசங்கர் கூறும் போது இநத ஊரின் முதல் குடியாக மல்லப்ப செட்டியார் குடும்பம் வருகை தந்தது . இதனால் இவ்வூர் மல்லப்பபுரம் என அழைக்கப்பட்டது எனவும் கூறுகிறார்.
சிவனையும், திருமாலையும் வழிபடும் போதுதான் வழிபாடு முழுமையடைந்து பரிபூர்ணக் கிருபை பெறமுடியும். எனவே இவ்வூரில் சிவன் விஷ்ணு ஆலய வழிபாடுக்கு ஏற்பாடு செய்தார். சௌந்தர்ய கயிலாயம் என இவ்வூர் போற்றப்படுகிறது.
இந்த ஊரில் தான் வீரபாண்டி செல்லாயி அம்மன் அருள் புரிய திருவிளையாடலை தொடங்கினார்.
(நதி வற்றாமல் ஓடும்)
நன்றி நன்றி
5 வருடமாக தொடருக்கு ஆதரவு தரும்
வணக்கம் மும்பை வாசகர்களுக்கு நன்றி
தாமிரபரணி வரலாறு தோண்ட தோண்ட வந்து கொண்டே இருக்கிறது. தொடர்ந்து 25 ஆண்டுகளாக எழுதிக்கொண்டே இருக்கிறேன். ஆனால் வரலாறு குவிந்துகொண்டே இருக்கிறது. குறிப்பாக பல வருடங்களுக்கு முன்பு மும்பையில் இருந்து வெளி வந்த மும்பை தமிழ் டைம்ஸ் என்ற பத்திரிக்கையில் “நதிக்கரையோர அற்புதங்கள் பாகம் 1” என்ற தலைப்பில் 5 வருடம் எழுதி வந்தேன். எதிர்பாராத விதமாக மும்பை தமிழ் டைம்ஸ் நின்று விட்டது . ஆனாலும் அந்த தொடரை காவ்யா பதிப்பகம் மூலமாக “தலைத்தாமிரபரணி” என்ற தலைப்பில் 1000 பக்க நூலாக வெளியிட்டேன். அந்த நூல் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு நூலகங்களிலும் தற்போதும் உள்ளது.
அதன் பின் வணக்கம் மும்பை ஆசிரியர் ஜெயஆசிர் அவர்கள் உதவியோடு “நதிக்கரையோரத்து அற்புதங்கள் பாகம் 2” என்ற இந்த தொடரை எழுதி வருகிறேன். தற்போது 250 வது வாரத்தினை கடந்து இந்த தொடர், 5 வது வருடமாக வெற்றி நடைபோடுகிறது. தற்போதும் காவ்யா பதிப்பகம் இந்த கட்டுரை தொகுப்பை “இடைத்தாமிரபரணி” என்ற பெயரில் 1000 ம் பக்க நூலாக தயார் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த நூலை வருகிற ஜனவரி மாதம் சென்னை புத்தக கண்காட்சியில் வைத்து வெளியிடப்போகிறோம்.
தாமிரபரணியின் தொடர் பயணத்தினை வெற்றியாக மாற்றிய வணக்கம் மும்பை வாசகர்களுக்கும், ஆசிரியர் ஜெயஆசீர் அவர்களுக்கும், உதவி ஆசிரியர் மற்றும் களப்பணியில் உதவிய அனைவருக்கும் நன்றி . இந்த வெற்றிக்கு முழு காரணம் நீங்கள்தான். உங்கள் ஆதரவோடு தாமிரபரணியின் தொடர் பயணத்தினை துவங்குகிறேன்.
அன்புடன் & எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு


