
மு. மேத்தா (முகமது மேத்தா, பிறப்பு: செப்டம்பர் 5, 1945) பெரியகுளத்தில் பிறந்தார். இவர் சென்னை மாநிலக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். புதுக்கவிதைக்கு ஏற்றம் தந்த கவிஞர்களுள் இவரும் ஒருவராவார்.இவர் எழுதிய நூலான ஆகாயத்துக்கு அடுத்த வீடு என்ற கவிதை நூலுக்கு 2006-ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது பெற்றார்.
உவமை உருவகங்களில் பழமையையும் புதுமையையும் இணைத்த மு.மேத்தா, வளமான கற்பனை, எளிய நடை, எளிய சொல்லாட்சி, மனித உணர்வுகளின் படப்பிடிப்புகளால் மக்கள் உள்ளத்தைக் கவர்ந்தவர். இவரது முதற் கவிதைத்தொகுப்பு கண்ணீர்ப் பூக்கள். காதல் சோகமும், தமிழ்த் தாகமும் இழையோடும் அவரது கவிதைகள் அவ்வப்போது கூர்மையான சமூக விமர்சனங்களிலும் இறங்குவதுண்டு. சமூக விமர்சனத் தொனியில் அமைந்த “தேச பிதாவுக்கு ஒரு தெருப் பாடகனின் அஞ்சலி” என்ற கவிதை மு.மேத்தாவுக்கு புகழ் தேடித் தந்த கவிதை ஆகும். மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், சிறுகதை, நாவல், கட்டுரைகள் முதலியவற்றைப் படைப்பதிலும் வல்லவரான மு. மேத்தா அத்துறைகளில் பதினைந்திற்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். அவருடைய நூல்களுள் “ஊர்வலம்” தமிழக அரசின் முதற்பரிசினைப் பெற்ற கவிதை நூலாகும். இவரது “சோழ நிலா” என்னும் வரலாற்று நாவல் ஆனந்த விகடன் இதழ் நிகழ்த்திய பொன்விழா இலக்கியப் போட்டியில் முதல் பரிசு பெற்றது ஆகும். இவர் திரைப்படத் துறையிலும் பாடல்கள் எழுதி வருகிறார்.
“நான் வெட்ட வெட்டத் தழைப்பேன்
இறப்பினில் கண் விழிப்பேன்
மரங்களில் நான் ஏழை
எனக்கு வைத்த பெயர் வாழை”
போன்ற வரிகள் இவர் போக்கினைக் காட்டும்.
“வானம்பாடி” என்ற புதுக்கவிதை ஏட்டின் வாயிலாக அறிமுகம் ஆன கவிஞர்களுள் மு.மேத்தாவும் ஒருவர்.
- கண்ணீர்பூக்கள்[3] (1974)
- ஊர்வலம்[4] (1977)
- மனச்சிறகு (1978)
- அவர்கள்வருகிறார்கள் (1980)
- முகத்துக்கு முகம் (1981)
- நடந்தநாடகங்கள் (1982)
- காத்திருந்த காற்று (1982)
- ஒரு வானம் இரு சிறகு (1983)
- திருவிழாவில் தெருப்பாடகன் (1984)
- நந்தவனநாட்கள் (1985)
- இதயத்தில் நாற்காலி (1985)
- என்னுடையபோதிமரங்கள் (1987)
- கனவுக்குதிரைகள் (1992)
- கம்பன் கவியரங்கில் (1993)
- என் பிள்ளைத் தமிழ் (1994)
- ஒற்றைத் தீக்குச்சி (1997)
- மனிதனைத்தேடி (1998)
- ஆகாயத்துக்கு அடுத்த வீடு (2004)
- மு.மேத்தா கவிதைகள் (2007)
- கலைஞருக்கும் தமிழ் என்று பேர் (2010)
- கனவுகளின்கையெழுத்து (2016)
- நாயகம் ஒரு காவியம் (இறுதி படைப்பு)