தூத்துக்குடியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வருகிற 9-ந் தேதி (வௌ்ளிக்கிழமை) நடக்கிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது: வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் மாதம் தோறும் 2-வது வெள்ளிக்கிழை நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாதத்துக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் வருகிற 9-ந் தேதி(வௌ்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது.
இந்த முகாமில் வேலையளிக்கும் தனியார் நிறுவன பிரதிநிதிகள் தங்கள் நிறுவனத்திற்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய கலந்து கொள்ளலாம். 10-ம் வகுப்பு, பிளஸ்-2, பட்டப்படிப்பு, பி.இ. டிப்ளமோ, ஐ.டி.ஐ, டிரைவர் மற்றும் கம்ப்யூட்டர் பயிற்சி உள்ளிட்ட கல்வித் தகுதியுடைய பதிவுதாரர்கள் கலந்து கொள்ளலாம். மேற்கண்ட தகுதியுள்ள, தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் தங்களது பயோடேட்டா மற்றும் கல்விச்சான்றுகளுடன் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வேலை நாடுநர்கள் தனியார் துறை நிறுவனங்களில் பணி நியமனம் செய்யப்படும் போதும், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு ரத்து ஆகாது. இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலையளிப்போர்கள் மற்றும் வேலைநாடுநர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்தல் வேண்டும். மேலும் வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான பல்வேறு தகவல்களை பெற THOOTHUKUDI EMPLOYMENT OFFICE என்ற Telegram Channel-ல் இணைந்து பயன் பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.


