காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா திருத்தல பேராலய விண்ணேற்புப் பெருவிழா நாளை (ஆக. 6) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் வீரமாமுனிவர் பங்கு குருவாக பணியாற்றிய காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா திருத்தல பேராலய விண்ணேற்புப் பெருவிழா நாளை (ஆக. 6) செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி, மாலை 6 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் கொடியேற்றுகிறார்.
10ஆம் தேதி காலை 6 மணிக்கு ‘மரியாளின் இறை அனுபவம்’ என்ற தலைப்பில் மரியன்னை மாநாடு, 11ஆம் தேதி காலை 8.30 மணிக்கு புது நன்மை விழா, 14ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு கோவில்பட்டி திருத்தல பங்குத்தந்தை சார்லஸ், பேட்டை பங்குத்தந்தை மரிய அந்தோணிராஜ் ஆகியோர் தலைமையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலி நிகழ்ச்சிகள் நடைபெறும்.
15ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் தேரடி திருப்பலி நிகழ்ச்சிகள், தொடர்ந்து இறைமக்களின் கும்பிடு சேவை நிகழ்ச்சி நடைபெறும். காலை 6, 8, 10 மணிக்கு திருவிழா திருப்பலிகள், நண்பகல் 12 மணிக்கு ஆங்கிலத்தில் திருப்பலி, பிற்பகல் 2 மணிக்கு மலையாளத்தில் திருப்பலி, மாலை 4 மணிக்கு ஹிந்தியில் திருப்பலி, 6 மணிக்கு திருப்பலி, நற்கருணை பவனி, 18 ஆம் தேதி அதிகாலை 6 மணிக்கு திருப்பலி, கொடியிறக்கம் ஆகியவை நடைபெறும்.
விழாவில், தமிழ்நாடு மட்டுமன்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரளான இறைமக்கள் பங்கேற்பர். ஆக. 14ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்துக்கு விடுமுறை அளிக்குமாறு கனிமொழி எம்.பி., சமூக நலன்- மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ. கீதா ஜீவன், ஆட்சியர் கோ. லட்சுமிபதி ஆகியோரிடம் பேராலயம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது என்று பேராலய அதிபரும் பங்குத்தந்தையுமான அந்தோணி அ.குரூஸ் தெரிவித்தார்.


