தூத்துக்குடி எட்டையபுரம் ரோடு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் 1055 வீட்டு மனைகளுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக மாநகர செயலாளர் முத்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி மாநகராட்சி வார்டு 3க்குட்பட்ட எட்டையபுரம் ரோடு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள 1055 வீட்டு மனைகளில் மக்கள் வீடு கட்டி 30 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வருகின்றனர்.
இந்த பகுதிக்கு மாநகராட்சி சார்பில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படுகிறது. ஆனால் இதுவரை பட்டா வழங்கப்பவில்லை. கிரையப் பத்திரம் பெற்ற வீட்டுவசதி வாரிய வீட்டு மனைகளுக்கு பட்டா வழங்கப்படாதது அதிர்ச்சி அளிக்கும் செய்தியாக உள்ளது.
இன்றைக்கு பட்டா இல்லாமல் அந்த நிலத்தை வைத்து எந்த பலனும் பெற முடியாமலும், அரசு நிலமாகவே தற்போது வரை வருவாய் ஆவணங்களில் இருந்து வருவதால் இவர்கள் தங்களது அவசர தேவைகளுக்கு எந்த வித பத்திரப் பதிவுகளும் செய்யமுடியாமலும் இக்கட்டான சூழ்நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுளனர்.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் 1987-ல் தூத்துக்குடி நகராட்சி குப்பை கிடங்கான சங்கரப்பேரி பஞ்சாயதது பகுதியில் இருந்த இடத்தை அரசு அனுமதி பெற்ற வீட்டு மனைகளாக பிரித்து பத்திரிக்கைளில் விளம்பரம் செய்து மனுக்கள் பெற்று குலுக்கல் முறையில் வீட்டு மனைகளை ஒதுக்கீடு செய்துள்ளது.
அனைதது பிரிவு மக்களுக்கும் 1992 முதல் ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டு மக்கள் முன் பணம் செலுத்தி மீதி தொகையை தவணை முறையிலும் ஒட்டுமொத்த தொகையாகவும் செலுத்தி விற்பனை பத்திரம் (Sale deed) பெற்றுள்ளனர். விற்பனை பத்திரம் வழங்கும் போது பட்டா மாறுதல் மனுவும் வீட்டுவசதி வாரிய நிர்வாகததால் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய இடம் என்பதால் மக்கள் எந்த கவலையுமின்றி வசித்து வந்துள்ளனர். ஆனால் தற்போது பட்டா ஒவ்வொரு நிலத்திற்கும் தேவை என்ற நிலமையும் விழிப்புணர்வும் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. இணையதளம் மூலம் நமது நிலத்தின் தன்மையை அறிய அரசு வழிமுறைகளை எற்படுத்தியுள்ளது.
இந்த நிலம் தமிழ்நாடு அரசு நில வகைப்பாடு ஆவணங்களில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் என்று வகைப்படுத்த படவில்லை. மேலும் தூத்துக்குடி நகராட்சிக்கு சொந்தமான நிலம் (நகராட்சி குப்பை கிடங்கு) என்பதாலும் நிலத்தை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் எடுத்து மனைகளாக பிரித்து விற்பனை செய்துள்ளதாலும் நிலத்தின் மீது எந்த பிரச்சனையும் எழ வாய்ப்பில்லை என்பதும் தெளிவாகிறது.
அது போல 2023 பிப்ரவரி மாதத்தில் கூட ஒரு பொது பயன்பாட்டு இடத்தை தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் கிரையம் செய்து கொடுத்துள்ளதும் அப்போது கூட பட்டா மாறுதல் கோரும் மனு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியததால் கிரைய பத்திரம் பதிவு செய்யப்படும் போது கொடுத்துள்ளதாக தெரிய வருகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் பல்லாயிரம் பொதுமக்கள் நலன் சார்ந்த இந்த விஷயத்தில் தலையிட்டு இந்த 1055 வீட்டு மனைகளின் உரிமை தாரர்களுக்கு தனிப் பட்டா கிடைக்கும் வகையில் வருவாய் துறையும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியமும் இணைந்து விரைந்து நடவடிக்கை எடுக்க ஆவண செய்யுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


