தூத்துக்குடியில் பலத்த காற்று காரணமாக இன்று 2வது நாளாக விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
தென் தமிழகம், மன்னார் வளைகுடா, குமரி கடல் ஆகிய பகுதிகளில் வருகிற 6-ந்தேதி வரை மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வரை பலத்த காற்று வீசும் எனவும், சில நேரங்களில் மணிக்கு 65 கிலோ மீட்டர் அளவில் சூறைக்காற்று வீசலாம் எனவும், இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது
தூத்துக்குடியில் கடந்த சில நாட்களாக பலத்த காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக இன்று 2வது நாளாக மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் 250-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதேபோன்று திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தில் 600-க்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.


