தூத்துக்குடியில் வெவ்வேறு பகுதிகளில் பள்ளி மாணவன், கல்லூரி மாணவி காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி தெர்மல் நகர் கேம்ப் 1 பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகன் முகேஷ் (14), அங்குள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகின்றான். நேற்று காலை தேர்வு முடிவு வெளியானதில் அவர் தேர்ச்சி பெறவில்லை எனத் தெரியவந்துள்ளது. இதனால் மனமுடைந்த முகேஷ் நேற்று மதியம் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.
பின்னர் வீடு திரும்பில்லை. இதையடுத்து குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து அவரை தந்தை மூர்த்தி தெர்மல் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து மாணவனை தேடி வருகிறார்.
கல்லூரி மாணவி மாயம்
தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே உள்ள சோழபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வேல்ராஜ் மகள் அனிதா மலர் (20), தூத்துக்குடியில் உள்ள பெண்கள் கல்லூரியில் பி.காம்., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 3ஆம் தேதி கல்லூரிக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவர் எங்கு சென்றார் என்ற விபரம் தெரியவில்லை. இதுகுறித்து அவரது தந்தை வேல்ராஜ் எப்போதும் வென்றான் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர்முகமது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


