பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தும் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்காத அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்கு தொடராதது ஏன்? என மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முத்தாலங்குறிச்சி காமராசு, மதுரை ஐகோர்டில் 2018&ஆம் ஆண்டில் தாக்கல் செய்த னுவில் நெல்லை தாமிரபரணி ஆற்றில் பழமையான படித்துறைகள், மண்டபங்கள் சிதிலமடைந்து வருகின்ற. இவற்றை பழமை மாறாமல் சீரமைத்து பராமரிக்கவும், ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கவும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள், தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கவில்லை என்றால் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு பல கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து இருந்தனர். இதுகுறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதில் அளிக்கவும் உத்தரவிடப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது விக்கிரமசிங்கபுரம் உள்ளிட்ட 5 உள்ளாட்சி நிர்வாகத்தினர் சார்பில் தனித்தனியாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இவற்றில், தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலக்கிறது. இதனை தடுக்க சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இதற்கான நிதி மற்றும் எந்திரங்களை பெறுவதில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூறப்பட்டு இருந்தது.
இதற்கிடையே, தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும்படி பல மாதங்களுக்கு முன்பு மதுரை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தாத அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு பல கோடி ரூபாய் அபராதம் அல்லது நஷ்டஈடு விதிக்க வேண்டும் என்றும் கோரி மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் அழகுமணி நேற்று மனு தாக்கல் செய்தார்.
பொதுப்பணித்துறை தலைமை பொறியாளரும், தாமிரபரணியில் கழிவுநீரை கட்டுப்படுத்த மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
பின்னர் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சார்பில் ஆஜரான வக்கீல், தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வகையில் ஏற்கனவே தேசிய பசுமை தீர்ப்பாயம் எங்களுக்கு உத்தரவு பிறப்பித்தது. அதன்பேரில் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு நாங்கள் கடிதம் அனுப்பி அறிவுறுத்தி கண்காணித்து வருகிறோம் என்டறார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தேசிய பசுமை தீர்ப்பாயம் எப்போது உத்தரவு பிறப்பித்தது என கேள்வி எழுப்பினார். அதற்கு வக்கீல், சில ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பப்பட்டது என்றார்.
இதை கேட்ட நீதிபதிகள், அப்படி என்றால் இத்தனை ஆண்டுகளாக உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு கடிதம் மட்டுமே அனுப்பப்பட்டு உள்ளதா? அதன் பேரில் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள், கழிவுநீர் கலப்பதற்கு காரணமானவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடர ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என கேள்வி எழுப்பினர்.
விசாரணை முடிவில், தாமிரபரணியில் எங்கெங்கு கழிவுநீர் கலக்கிறது என்பதை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் நேரில் ஆய்வு செய்ய வேண்டும். பின்னர் இதனை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து இந்த கோர்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 22&ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.


