தூத்துக்குடியில் ஊர்க்காவல் படையினருக்கான பயிற்சி முடிவடைந்து நிறைவு விழா அணிவகுப்பு இன்று நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக இருந்த பணியிடங்களுக்கு 64 பேர் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை ஆயுதப்படையில் கடந்த 08.01.2024 அன்று பயிற்சி ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் (05.03.2024) நிறைவு பெற்றது. இந்தப் பயிற்சியானது அரசு விடுமுறை நாட்களை தவிர்த்து மொத்தம் 45 நாட்கள் தினமும் கவாத்து பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சி நிறைவு நாளான இன்று (05.03.2024) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வளாக மைதானத்தில் கவாத்து அணிவகுப்பு சூர்யகிஷாந்த் என்பவர் தலைமையில் 64 படை வீரர்கள் கொண்ட ஊர்க்காவல் படையினர் மிகச் சீரிய முறையில் அணிவகுத்து சென்று தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் உன்னிகிருஷ்ணன் அவர்களுக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்தி நிறைவு செய்தனர்.
இந்த அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஊர்க்காவல் படையினராகிய உங்கள் அனைவரின் பங்களிப்பும் தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு நன்மையளிப்பதாக இருக்க வேண்டும் என்று கூறி ஊர்க்காவல் படையினரின் பணி சிறக்க வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
இப்பயிற்சி நிறைவு விழா அணிவகுப்பில் மாவட்ட ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் புருஷோத்தமன், ஆயுதப்படை காவல் உதவி ஆய்வாளர் கௌசல்யா, வட்டார தளபதி பாலமுருகன், துணை வட்டார தளபதி கௌசல்யா, படை பிரிவு தளபதி சந்திரசேகர், துணைப்படை பிரிவு தளபதி உலகம்மாள் மற்றும் காவல்துறையினர் பலர் உடனிருந்தனர்.


