பரமன்குறிச்சி பகுதியில் வெள்ளநீரை அகற்றும் பணி நிறைவடைந்ததும் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்படும் என கனிமொழி எம்.பி. உறுதி அளித்தாா்.
அண்மையில் பெய்த கனமழையால் சடையனேரி குளம் உடைந்து அதிகளவு நீரானது கிராமங்களுக்குள் புகுந்தது. இதில் பரமன்குறிச்சி அருகே வட்டன்விளை கிராமத்தை வெள்ளநீா் சூழ்ந்ததால் கிராம மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்தனா். உடன்குடி-பரமன்குறிச்சி சாலையை வெள்ளநீா் மூழ்கடித்ததால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
மேலும் விளை நிலங்களும் நீரில் முழ்கின.இப்பகுதிகளில் சூழ்ந்துள்ள வெள்ளநீரை ராட்சத பம்புகள் மூலம் அகற்றும் பணி கடந்த 7 நாள்களாக நடைபெற்று வருகிறது. பரமன்குறிச்சி கஸ்பா பகுதியில் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தினரும், வட்டன்விளை பகுதியில் கடலூா் மாவட்டம் ஆலத்தியூா் ராம்கோ நிறுவத்தினரும் நீா் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த பணிகளை தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி, மீன்வளம்-மீனவா் நலன் மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். வெள்ளநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளா்கள், திமுக நிா்வாகிகள் உள்ளிட்டோரை பாராட்டினா். வெள்ளநீரை அகற்றும் பணி நிறைவடைந்ததும் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்படும் என கனிமொழி எம்.பி. உறுதி அளித்தாா். ஆய்வின்போது தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


