கனிமொழி கருணாநிதி (5 சனவரி 1968) திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி ஆவார். தற்போது 17வது மக்களவையின் உறுப்பினராக உள்ளார். அதற்கு முன்புவரை அவர் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். இவர் தமிழக அரசியல் தலைவர் மு. கருணாநிதியின் மூன்றாவது மனைவியின் மகள் ஆவார். இதழியல், இலக்கியத் துறைகளிலும் கனிமொழிக்கு ஆர்வம் இருந்து வந்திருக்கின்றது.
மு. கருணாநிதியின் மூன்றாவது மனைவி ராஜாத்தி அம்மாளுக்கு முதல் மகளாக 1968 ஆம் ஆண்டு அன்றைய ஒருங்கிணைந்த திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் பிறந்தார்.பின்பு பள்ளிப் படிப்பை சென்னை சர்ச் பார்க்கிலும் பெரிசண்டேஷன் கான்வன்டிலும், வணிகவியலில் முதுகலைப் பட்டத்தை எத்திராஜ் கல்லூரியிலும் கனிமொழி பயின்றார்.பிறகு 1989 ஆம் ஆண்டு அதிபன் போஸ் என்பவரை மணந்தார். இத்திருமண வாழ்க்கை மண முறிவில் முடிய ஆகஸ்டு 21, 1997 அன்று அரவிந்தன் என்பவரை மறுமணம் புரிந்தார்.இவருக்கு ஆதித்யா என்று ஒரு மகன் உள்ளார்.
2007 சூலை இந்திய மாநிலங்களவையின் உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்ட இவரது பதவிக்காலம் 2013ம் ஆண்டு முடிவடைந்தது. இரண்டாவது முறையாக 2013இல் மீண்டும் மாநிலங்களவையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2019 ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், தூத்துக்குடி தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


