தூத்துக்குடி நியூ காலனி அஞ்சலகத்தில் ஒருங்கிணைந்த பட்டுவாடா மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முதுநிலை கோட்டக் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தூத்துக்குடியில் உள்ள தற்போதைய நியூ காலனி அஞ்சலகத்தில் (பழைய தலைமை அஞ்சலகம், பீச் ரோடு) ஒருங்கிணைந்த பட்டுவாடா மையம் 27.06.2025 முதல் தொடங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி தலைமை அஞ்சலகம் மற்றும் மேலூர் அஞ்சலகத்தைச் சார்ந்த தபால்கள் அனைத்தும் இந்த ஒருங்கிணைந்த பட்டுவாடா மையத்தில் உள்ள தபால்காரர்கள் மூலம் முகவரியாளர்களுக்கு நேரடியாக வழங்கப்படுகிறது.
ஒருங்கிணைந்த பட்டுவாடா மையத்தின் மூலம் தபால் பட்டுவாடா நடைபெறுவதால் கால தாமதம் இன்றி வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தூத்துக்குடி தலைமை அஞ்சலகம் மற்றும் மேலூர் அஞ்சலகத்திற்கு உட்பட்ட தபால்கள் பட்டுவாடா / முகவரி மாற்றம் / விசாரணை / புகார்களுக்கு ஒருங்கிணைந்த பட்டுவாடா மையத்தை தொடர்பு கொள்ளவும் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


