தூத்துக்குடி மாவட்டத்தில் மதி அங்காடி நடத்துவதற்கு மகளிர் சுய உதவிக்குழுக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்தின் மூலம் தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலைத்தில் (அறிஞர் அண்ணா பேருந்து நிலையம்) அமைக்கப்பட்டுள்ள மதி அங்காடியில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்களை நேரடியாக விற்பனை செய்யும் நேர்வில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு கிடைப்பதுடன் பயணிகளுக்கும் அங்குள்ள பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்க வழிவகை ஏற்படும்.
எனவே, மதி அங்காடியை செயல்படுத்திட தூத்துக்குடி மாநகராட்சி பகுதி மற்றும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி பகுதிகளிலுள்ள (மதி அங்காடி அமைவிடத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்திற்குட்பட்ட) ஆர்வமும், தகுதி உடைய மகளிர் சுய உதவிக்குழுக்கள் / ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு / பகுதி அளவிலான கூட்டமைப்பு மற்றும் மாற்றுத்திறனாளி நலிவுற்றோர் குழுக்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்போர் கீழ் குறிப்பட்டுள்ள நிபந்தனைகளை பின்பற்றி விண்ணப்பம் சமர்ப்பித்திட தெரிவிக்கப்படுகிறது.
நிபந்தனைகள் சுய உதவிக்குழு தரமதிப்பீட்டில் தேர்ச்சி பெற்று இருப்பதுடன் ஒரு வங்கிக்கடன் இணைப்பாவது பெற்று இருத்தல் வேண்டும். சுய உதவிக்குழு தொடங்கி ஓர் ஆண்டாவது பூர்த்தி செய்திருக்க வேண்டும். சுய உதவிக்குழு மீது எந்தவித புகார்களும் இல்லை என்பதை சம்பந்தப்பட்ட வட்டார மேலாளர் / சமுதாய அமைப்பாளர் சான்றிதழ் வழங்க வேண்டும். தேர்வு செய்யப்படும் சுய உதவிக்குழு/ கூட்டமைப்பிற்கு அங்காடி ஒதுக்கப்படுவதில்லை. அங்காடியின் உரிமை மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்திடமே இருக்கும். அங்காடி நடத்துவதற்கான வாய்ப்பு மட்டும் 6 மாதங்களுக்கு வழங்கப்படும்.பின்னர் சுழற்சி, விற்பனை மற்றும் திறன் அடிப்படையில் தொடர்ந்து அனுமதி வழங்கப்படும்.
ஆர்வமுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் / ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு / பகுதி அளவிலான கூட்டமைப்பு மற்றும் மாற்றுத்திறனாளி நலிவுற்றோர் குழுக்கள் தங்கள் விண்ணப்பங்களை 19.07.2025-க்குள் இணை இயக்குநர் / திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 2வது தளம், தூத்துக்குடி 628101 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க தெரிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.


