தூத்துக்குடி சிதம்பர நகர் பகுதியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக அமைக்கப்பட்டிருந்த சாலையோர ஆக்கிரமிப்புகள் மற்றும் பேனர்களை மாநகராட்சிப் பணியாளர்கள் அதிரடியாக அகற்றினர்.
தூத்துக்குடி சிதம்பர நகர் மெயின் ரோடு பகுதியில் உள்ள நடைபாதைகளில், பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பலத்த காற்று வீசினால் விழும் நிலையில் இருந்த விளம்பரப் பேனர்கள், பதாகைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் அறிவிப்புப் பலகைகள் எவ்விதப் பாதுகாப்பும் இன்றி வைக்கப்பட்டிருந்தன.
இதுகுறித்து வந்த புகார்களைத் தொடர்ந்து, மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையரின் உத்தரவின் பேரில், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் நேற்று அந்தப் பகுதியில் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பொதுமக்களின் நடைபாதையை ஆக்கிரமித்து ஆபத்தான முறையில் வைக்கப்பட்டிருந்த அனைத்துப் பேனர்களையும் பணியாளர்கள் சம்பவ இடத்திலேயே அப்புறப்படுத்தினர்.
மேலும், இப்பகுதியின் முக்கியச் சாலை ஓரங்களை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த தற்காலிகக் கடைகள், வணிக நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நடைபாதை பகுதிகள் மற்றும் போக்குவரத்திற்குப் இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்த ஆக்கிரமிப்பு உள்கட்டமைப்புகள் அனைத்தும் மாநகராட்சிப் பணியாளர்களால் நேற்று முழுமையாக அகற்றப்பட்டன.
சாலை ஆக்கிரமிப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள மாநகராட்சி நிர்வாகம், மீண்டும் நடைபாதைகளை ஆக்கிரமித்தால் கடுமையான சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளது. இந்த அதிரடி நடவடிக்கைக்குப் பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.


