குலசேகரன்பட்டினத்தில் நடத்தை சந்தேகத்தில் பெண்ணை கல்லால் தாக்கி கொலை செய்த 2-வது கணவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் பூவதி (45). இவர், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு முதல் கணவர், குழந்தைகளை பிரிந்து ஆறுமுகநேரி செல்வராஜபுரத்தைச் சேர்ந்த நடராஜன் மகன் வெங்கடேசன் (46) என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். ஆறுமுகநேரியில் வசித்து வந்த இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். வெங்கடேசன் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
கடந்த சில மாதத்திற்கு முன்பு வெங்கடேசன் மனைவி, மகன்களுடன் குலசேகரன்பட்டினம் அரசு மாணவியர் விடுதி தெருவில் உள்ள காம்பவுண்டில் வாடகைக்கு குடியேறினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு 11.30 மணிக்கு காம்பவுண்டில் உள்ள வேப்ப மரத்திற்கு கீழே பூவதி முகத்தில் கல்லால் தாக்கப்பட்டு பலத்த காயங்களுடன் கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் திருச்செந்தூர் ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர்.
ஆனால் அவர் பரிதாபமாக இறந்து போனார். வெங்கடேசன் தலைமறைவாகி விட்டார். இது குறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று கல்லாமொழி பகுதியில் அவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அப்போது அவர் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில், பூபதியின் நடத்தையில் எனக்கு சந்தேகம் இருந்து வந்தது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
சம்பவத்தன்று இரவும் மதுபோதையில் வீட்டுக்கு சென்றேன். வீட்டுக்கு அருகே உள்ள மரத்தடியில் நின்றுபோது, பூபதியின் நடத்தை குறித்து பேசியபோது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த நான், அருகில் கிடந்தகல்லை எடுத்து அவரது முகத்தில் சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டேன். பின்னர் அவர் இறந்து விட்டது தெரிய வந்தது, என தெரிவித்துள்ளார். தொடர்ந்து கைது செய்யப்பட்ட வெங்கடேசன் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.


