குமரியில் 69,945 பேர் பொதுத்தேர்வு எழுதுகிறார்கள். வினாத்தாள் வைக்கப்பட்டுள்ள 4 இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் -1, பிளஸ்- 2 பொதுத் தேர்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பிளஸ்-2 தேர்வு வருகிற 5-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை நடக்கிறது. குமரி மாவட்டத்தை பொறுத்த மட்டில் 11, 216 மாணவர்களும் 12, 056 மாணவிகளும் என மொத்தம் 23 ஆயிரத்து 272 பேர் தேர்வு எழுதுகிறார்கள். மாணவர்களை விட மாணவிகள் அதிகமானோர் தேர்வு எழுத உள்ளனர்.
பிளஸ்-1 தேர்வு வருகிற 10-ந் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடக்கிறது. 11 ஆயிரத்து 584 மாணவர்கள் 11 ஆயிரத்து 805 மாணவிகள் என மொத்தம் 23 ஆயிரத்து 389 பேர் தேர்வு எழுதுகிறார்கள். பிளஸ்-2 ,பிளஸ்-1 தேர்வை பொருத்தமட்டில் 85 தேர்வு மையங்களில் தேர்வு நடக்கிறது.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு வருகிற 6-ந் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நடக்கிறது. 11 ஆயிரத்து 697 மாணவர்களும் 11,587 மாணவிகள் என மொத்தம் 23 ஆயிரத்து 284 பேர் தேர்வு எழுதுகிறார்கள். 115 மையங்களில் தேர்வு நடக்கிறது.
தேர்வுக்கான ஏற்பாடுகளை கல்வி மாவட்ட அதிகாரிகள் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் 30 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. மாவட்டம் முழுவதும் பொது தேர்வை கண்காணிக்க 120 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி தலைமையில் பறக்கும் படை அதிகாரிகள் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள உள்ளனர். பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுக்கான வினா தாள்கள் குமரி மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் தக்கலை, குழித்துறை, திருவட்டாறு கல்வி மாவட்டங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. வினாத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் அன்று வினாத்தாள்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


