தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் நடந்து வருகிறது. கிராமங்களில் இதுவரை பரபரப்பாக பிரச்சாரம் எதுவும் நடைபெறவில்லை. ஏற்கனவே சுட்டெரிக்கும் வெயிலில் துவண்டு போன கட்சிகாரர்கள், சுட்டெரிக்கும் வெயில் தன்னுடைய சுடரை அகற்றிய பிறகே வீதிக்கு வந்து வாக்கு சேகரிக்கிறார்கள்.
ஆனாலும் ஸ்ரீவைகுண்டம் அருகே செய்துங்கநல்லூரில் பாஜக கொடியை உடம்பில் கட்டிக்கொண்டு வலம் வந்த பிச்சைக்காரர் ஒருவர் அழுகிய பழங்களை நடுரோட்டில் போட்டு, அப்போது தான் சாலை வாகன ஓட்டிகள் சுத்தம் செய்வார்கள். அவர்களுக்கு விழிப்புணர்வு செய்கிறேன் என்று கூறிக்கொண்டு உற்சாகமாக சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
செய்துங்கநல்லூர் வாரச்சந்தை பகுதியில் உச்சி வெயிலில் , சாலையில் யாருமே நடந்து செல்ல முடியவில்லை. வாகனத்தில் செல்வோர் கூட ஓதுங்கியே நின்றனர். நெல்லை பகுதியில் கோடை மழை பெய்தாலும் கூட ,செய்துங்கநல்லூரில வெயில் சுட்டெரித்துக்கொண்டு இருந்தது. அந்தசமயத்தில் உடம்பில் பாஜக கொடியை கட்டிக்கொண்டு தலையில் பாஜக தொப்பியை போட்டுக் கொண்டு ஒரு யாசகர் (பிச்சைக்காரர்) ஒவ்வொரு கடைகளுக்கும் சென்று தர்மம் எடுத்து வந்தார். தீடிரென்று அவர் உற்சாகமாய் ஓடி, பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளை அள்ளி நடுரோட்டில் போட்டார்.

நேற்றைய தினம் செய்துங்கநல்லூர் வாரச்சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்து அழுகிய பழங்களை வியாபாரிகள் ஓரமாக கொட்டிச் சென்றிருந்தனர். அந்த அழுகிய பழங்களை எடுத்து திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில் நடுரோட்டில் கொண்டு போட்டார். சாலையோரம் கிடந்த குப்பைகளையும் நடுரோட்டில் காலால் இடறி வீசினார். எதற்காக இப்படி போடுகிறீர்கள் என்று பொதுமக்கள் கேட்டதற்கு, இப்படி போட்டால் தான் ரோட்டில் வருபவர்கள் விழிப்புணர்வுடன் வாகனத்தை ஓட்டிச் செல்வார்கள், பொது இடத்தினை சுத்தம் செய்வார்கள் என கூறிவிட்டு, ஆர்வத்தோடு பிளாஸ்டிக் பாட்டிலை காலால் இடறி நடுரோட்டுக்கு தள்ளினார். பூசணிக்காய் ஒன்றை எடுத்து சாலையில் சென்ற அரசு பேருந்து சக்கரத்தில் குறிபார்த்து எறிந்தார். அந்த பூசணிக்காய் சக்கரத்தில் சரியாக விழுந்ததை கண்டு ஆனந்தம் அடைந்தார்.
அதன் பின் சிரித்துக்கொண்டே ஒவ்வொரு கடைகளாக தர்மம் எடுக்க கிளம்பிச் சென்றார். கடைகளில் பிச்சை எடுத்தாரோ இல்லையோ, வேஸ்ட் பொருள்களை ரோட்டில் போடுவதில் குறியாக இருந்தார்.
இவரின் செயல் சிரிப்பாக இருந்தாலும் அந்த மனநிலை பாதிக்கப்பட்டவர், யாரிடமோ கிடைத்த பி.ஜே.பி கொடியை உடலில் மறைத்தப்படி சென்றது அதை பார்த்த மக்கள் மனதை கனக்க செய்தது.


