மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நிவாரணத்தை வழங்கவில்லை என்று கூறி ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களால் பரபரப்பு.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் ஏராளமான கிராமங்கள் பாதிக்கப்பட்டது. இதில் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தது. சேதமடைந்த வீடுகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு நிவாரண தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில் 50க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும் கால்வாய் கிராமத்திற்கு செல்லும் அரசு பேருந்து இரவு நேரங்களில் ஊருக்குள் வராமல் செல்வதால் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பும் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த கால்வாய் கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் சேர்ந்து ஊராட்சி மன்றத்தலைவர் சேதுராமலிங்கம் தலைமையில் திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி மாயவன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத் தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அதில் உடனடியாக இன்று அதிகாரிகளை ஆய்வு செய்யப்பட்டு, சரியாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அரசு பேருந்து இரவு நேரங்களில் ஊருக்குள் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொதுமக்களிடம் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் சிவக்குமார் தெரிவித்தார்.
இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


