பண்டிட் பிர்ஜு மகராஜ் என்று பிரபலமாக அறியப்பட்ட பிரிஜ்மோகன் மிசுரா, இந்தியாவில் கதக் நடனத்தின் அலகாபாத் கல்கா-பிந்தாடின் கரானாவின் ஹண்டியா (இலக்னோ) நிபுணராவார். இவர் கதக் நடனக் கலைஞர்களின் மகராஜ் குடும்பத்தின் வம்சாவளியைச் சேர்ந்தவர். இவரது இரண்டு மாமாக்கள், சம்பு மகாராஜ் மற்றும் இலச்சு மகாராஜ் மற்றும் இவரது தந்தை ஆகியோர் இவருக்கு குருவாக இருந்துள்ளனர். நடனம் இவரது முதல் விருப்பம் என்றாலும், இவர் பாரம்பரிய இந்துஸ்தானி இசையை பயிற்சி செய்கிறார். மேலும், ஒரு பாடகராகவும் இருக்கிறார்.
பாரதிய கலா கேந்திராவில் இவரது மாமா சம்பு மகாராஜுடன் இணைந்து பணியாற்றிய பின்னர், பின்னர் புது தில்லி கதக் கேந்திராவில், பல ஆண்டுகளாக, 1998 ஆம் ஆண்டு ஓய்வு பெறும் வரை, புது தில்லியில் தனது சொந்த நடனப் பள்ளியான கலாசிரமத்தை திறக்கும் வரை, பல ஆண்டுகளாக இவர் தலைவராக இருந்தார்.
ஆரம்பகால வாழ்க்கையும், பின்னணியும்
இராய்கர் சுதேச மாநிலத்தில் அரசவை நடனக் கலைஞராக பணியாற்றிய லக்னோ கரானாவின் ஆசிரியர் மகராஜ் என்று பிரபலமாக அறியப்பட்ட கதக் நிபுணரான ஜகந்நாத் மகராஜின் வீட்டில் பிர்ஜு மகாராஜ் பிறந்தார். இவருக்கு இவரது மாமாக்கள், இலச்சு மகராஜ் மற்றும் சம்பு மகராஜ் மற்றும் இவரது தந்தை ஆகியோர் பயிற்சியளித்தனர். மேலும் இவர் தனது ஏழு வயதில் தனது முதல் பாடலை பாடினார். இவரது ஒன்பது வயதில் 1947 மே 20 அன்று இவரது தந்தை இறந்தார்.
தொழில்
இவர், தனது பதின்மூன்றாவது வயதில் புதுதில்லியில் உள்ள சங்கீத பாரதிப் பள்ளியில் நடனத்தை கற்பிக்கத் தொடங்கினார். பின்னர் இவர் தில்லியில் உள்ள பாரதிய கலா கேந்திரத்திலும், கதக் கேந்திராவிலும் (சங்கீத நாடக அகாடமியின் ஒரு பிரிவு) கற்பித்தார். அங்கு இவர் ஆசிரியத் தலைவராகவும், இயக்குநராகவும் இருந்து, 1998 இல் ஓய்வு பெற்றார். அதன் பிறகு இவர் தனது சொந்த நடனப் பள்ளியான கலாசிரமம் என்ற பள்ளியை தில்லியில் திறந்தார். சத்யஜித் ரேயின் சத்ரஞ்ச் கே கிலாரி என்றத் திரைப்படத்தில் இரண்டு நடனக் காட்சிகளுக்காக இவர் இசையமைத்து, பாடியுள்ளார். மேலும் தேவ்தாஸ் என்றத் திரைப்படத்தில் காஹே சேத் மோஹே என்ற பாடலுக்கு நடனமைத்தார்.
இறப்பு
மகராஜ் 17 சனவரி 2022 அன்று தனது 83வது வயதில் தில்லியில் உள்ள தனது இல்லத்தில் மாரடைப்பால் காலமானார். இவர் இறப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு, சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு, நீரிழிவு நோய்க்கு கூழ்மப்பிரிப்பு சிகிச்சை மேற்கொண்டிருந்தார்.
விருதுகளும், கௌரவங்களும்
1986 – கிருஷ்ண கானசபாவால் நிருத்ய சௌதாமணி என்ற விருது வழங்கப்பட்டது
2002 – உசைப் மங்கேசுகர் புரஸ்கார் விருது வழங்கப்பட்டது.
2012 – விஸ்வரூபம் என்ற படத்தில் உன்னைக் காணாது என்ற பாடலுக்கு தேசியத் திரைப்பட விருது வழங்கப்பட்டது.
2016 – பாஜிராவ் மஸ்தானி படத்தில் மோஹே ரங் தோ லால் என்ற பாடலை பாடி பூங்கி விருதினை பெற்றார்.
இந்திரா கலா சங்கீத விஸ்வவித்யாலயாவின் மதிப்புறு முனைவர் பட்டம்
பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் மதிப்புறு முனைவர் பட்டம்
சங்கம் கலா விருது
பாரத் முனி சம்மான்
ஆந்திர ரத்னா
நிருத்யா விலாஸ் விருது
ஆதர்ஷிலா ஷிகர் சம்மன்
சோவியத் நாடு நேரு விருது
தேசிய நிருத்யா சிரோமணி விருது
ராஜீவ் காந்தி தேசிய சத்பாவன விருது
பத்ம விபூசண் விருது