தூத்துக்குடியில் சாலை ஓரத்தில் புத்தகவண்டி வைத்து அனைவரையும் புத்தகத்தை வாசிக்க வைக்கும் சைமன் பிறந்த நாள் விழா நடைபெற்றது
தூத்துக்குடியைச் சேர்ந்த சைமன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை நடமாடும் நூலகமாக மாற்றி அமைத்துள்ளார். தினமும் மாலை நேரத்தில் தனது இல்லத்தில் இருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை கொண்டு வந்து தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலையில் வஉசி கல்லூரி அருகே இரவு தெருவிளக்கு வெளிச்சத்தில் தனது இருசக்கர வாகனத்தை நடமாடும் நூலகமாக அமைத்துள்ளார்.
இந்த நூலகத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி வாசிக்கக் கூடிய வகையில் கதைகள், கவிதை தொகுப்புகள், இளம் எழுத்தாளர்களின் புத்தகங்கள், பெரியார் ,அம்பேத்கர் போன்ற தலைவர்களின் புத்தகங்கள் அரசியல், ஆன்மீகம், அறிவு வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு பல்சுவை புத்தகங்களை தனது நூலகத்தில் அமைத்து பொதுமக்கள் பயன்பெற நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை வைத்துள்ளார்.
இரவு 8 மணி முதல் 10 மணி வரை செயல்படும் இந்த நடமாடும் நூலகத்தை போட்டி தேர்வுக்கு தேர்வு எழுதும் மாணவர்கள் குழந்தைகள் மற்றும் பல்வேறு தரப்பினர் பயன்படுத்தி வாசகர்களாக உருவாக்கியுள்ளனர். இந்த இரவு நேர நடமாடும் உலகம் தூத்துக்குடி மாநகர மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில், சாலையோர நூலகத்திலேயே சைமன் தனது பிறந்த நாள் விழாவை கொண்டாடினார். இதில், நெடுஞ்சாலைத் துறையில் வேலை பாா்த்து ஓய்வுபெற்ற செல்வராஜ் பிறந்த நாள் வாழ்த்து கவிதை வாசித்து புத்தகம் பரிசாக வழங்கினாா். அவரது நண்பர்கள் தெறிசுந்தர் அன்பு, தூத்துக்குடி மாதிரி பள்ளியில் கலை ஆசிரியர் சக்கிவேல் ஆகியோர் வாழ்த்திப் பேசினார். சைமன் அனைவருக்கும் புத்தகம் பரிசாக வழங்கினார்.


