தூத்துக்குடி தமிழ் இலக்கியப் பேரவையின் சார்பில் மூன்று பேருக்கு விருதும், 9 பேருக்குப் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்போகிறோம், நீங்கள் கண்டிப்பாக வர வேண்டும் என அதன் செயலாளர் ஆதி அருமைநாயகம் அவர்கள் அன்புக் கட்டளையிட்டார்கள். அதோடு மட்டுமல்லாமல் தம்பி ‘குமிழ்முனை’ சைமன் அவர்களுடன் நேரில் பார்க்க வந்தார். ஆனால், நான் அப்போது அவர்களைப் பார்க்க இயலவில்லை.
இதற்கிடையில் 30.08.2026 அன்று எனக்குப் பல தடங்கல்கள் ஏற்பட்டன. நண்பர் வழக்கறிஞர் ரவி அவர்கள் நெல்லையில் பூமணி அய்யாவுக்கு நடந்த விழாவிற்கு அழைத்திருந்தார்; நேரம் கூறவில்லை. கடைசி நேரத்தில், ஒரே நேரத்தில் தான் அந்த நிகழ்வும் அமைந்தது. நமது மண்ணின் மைந்தர் திரைப்பட இயக்குநர் மந்திர மூர்த்தி அவர்கள் மதுரையில் புதிய படத்திற்குப் படப்பிடிப்பு நடத்துகிறார். மகனுடன் காலையில் அங்கே சென்றுவிட்டு, தூத்துக்குடி நிகழ்ச்சிக்கு வந்துவிட வேண்டும் என உறுதிபூண்டேன்.
அதற்கு ஒரு காரணம் உண்டு. என்னுடைய நண்பர் கே.ஆர்.பி. மணிமொழிச்செல்வனுக்கு ‘இலக்கியச் செம்மல்’ விருதும், என்னுடைய எழுத்துலக வளர்ப்பு மகள் சாந்தி பிரபுவுக்கு ‘இளம் எழுத்தாளர்’ விருதும் வழங்க உள்ளார்கள். அதோடு மட்டுமல்லாமல் ஆங்கில மருத்துவப் பாடநூலினைத் தமிழ்ப்படுத்திய மருத்துவர் இராசலிங்கம் அவர்களுக்கும் ‘இலக்கியச் செம்மல்’ விருது வழங்க உள்ளார்கள்.
சரியான நேரத்திற்குச் சென்றுவிட்டேன். தம்பி குமிழ்முனை சைமன் என்னை தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள (லட்சுமி) பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை அரங்கிற்கு அழைத்துச் சென்றார். நிகழ்ச்சி சற்று தாமதமாகத்தான் ஆரம்பித்தது, ஆனாலும் சிறப்பாக இருந்தது. குறிப்பாக, வழக்கமாக மேடையில் முக்கியப் பிரமுகர்களை அமர வைப்பார்கள்; விருது வாங்குபவர்களை மேடைக்கு அழைத்துக்கௌரவிப்பார்கள்.
ஆனால் இங்கே, ‘இலக்கியம் பூக்கும் இனிய மாலையில்’ விருதாளர்கள் மூன்று பேரையும் தலைவர் துரை கணேசன் அவர்களோடு மேடையில் அமரவைத்து நிகழ்ச்சியை ஆரம்பித்தார்கள். பேரவையின் புரவலர் பழரசம் பா. விநாயகமூர்த்தி வருகை தந்து அனைவருக்கும் விருது வழங்கினார்.
இலக்கியப் பணிக்காக நூலகர் லதா, எழுத்தாளர் மாரிமுத்து, பிரபாவதி, இலக்கியப் பேச்சாளர் மாணிக்கவாசகம், நெடுஞ்சாலைக் கவிஞர் செல்வராஜ், நல்லாசிரியர் பாலகிருஷ்ணன், இளம் பேச்சாளர் செல்வி அமிர்த வர்ஷினி, எழுத்தாளர் ஜரா யாழினி, மோர்ஜியா ஆகியோருக்குக் கேடயம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியை மிகச்சிறப்பாகக் கவிஞர் ஜடாஸ்ரீ சவரிமுத்து, தமிழாசிரியை வள்ளிநாயகி ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள். கவிஞர் தேவிகா பொன்னம்பலம், மருத்துவர் மாரிமுத்து, புலவர் முத்துசாமி, குமிழ்முனை சைமன், கவிஞர் நீதிச்செல்வன், தேரிக்காட்டு இலக்கியவாதி அண்ணன் கண்ண குமார விஸ்வரூபன், இலக்கியச் செம்மல் அய்யா சங்கரலிங்கம் ஆகியோருடன் நானும் வாழ்த்திப் பேசினேன்.
அனைவருமே விருதாளர்கள் மூன்று பேரையும் பாராட்டிப் பேசினோம். அதன்பின் இறுதியில் மூன்று பேரும் ஏற்புரை வழங்கினார்கள். சிறப்பான இந்நிகழ்ச்சியில் மருத்துவர் மாரிமுத்துவின் இலக்கியப் பேச்சு என்னைக் கவர்ந்தது. இறுதியில் அமைப்பாளர் ஜெயக்குமார் நன்றி கூற, அருமையான சிற்றுண்டியுடன் விழா முடிந்தது.
என்னைச் சரியான நேரத்தில் தூத்துக்குடியில் பேருந்து ஏற்றிவிட்டார் சைமன். எனக்காக என் மகன் கே.டி.சி. நகரில் மோட்டார் சைக்கிளுடன் காத்துநிற்க, இரவு 11 மணிக்கெல்லாம் வீடு வந்து சேர்ந்துவிட்டேன்.
அருமையான புகைப்படம் எடுத்துத் தந்த ரவி அண்ணாவிற்கு மிக்க நன்றி. விரைவில் இதன் ஒளிபரப்பு சமூக வலைதளங்களில் வலம் வரும்.
மனநிறைவான நிகழ்ச்சி! விருதாளர்கள் அனைவரும் தங்களின் துணையோடு வந்து விருது பெற்றது மேலும் சிறப்பு.
வாழ்த்துகள் அருமைநாயகம் அய்யா, சிறக்கட்டும் உங்கள் பணி!
– அன்புடன்
முத்தாலங்குறிச்சி காமராசு


