கோவில்பட்டி அருகே கடலை மிட்டாய் கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சாம்பலாகின.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கூசாலிப்பட்டி சாந்தி நகர் மேட்டு தெருவை சேர்ந்தவர் கந்தசாமி மகன் பாக்கியதுரை (45). இவர் தனது வீட்டின் அருகே கடலை மிட்டாய் கம்பெனி வைத்து 10 வருடமாக நடத்தி வருகிறார். இந்த கம்பெனியில் 18 பேர் வேலை செய்து வருகின்றனர். வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் இரவு 9.30 மணிக்கு பாக்கியதுரை கம்பெனியை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.
அதிகாலை 3 மணி அளவில் பாக்கியதுரை தற்செயலாக எழுந்து வெளியே வந்த போது, கம்பெனியில் தீப்பற்றி எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக தீயணைப்பு துறையினருக்கும், போலீசாருக்கும் அவர் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


