கோவில்பட்டி அருகே பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றபோது மின்சாரம் தாக்கி விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம்,கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்த தங்கமுத்து என்ற அந்தோணி மகன் மார்ட்டின் (45). விவசாயியான இவர், ஊருக்கு வடக்கே தனது 2 ஏக்கர் வயலில் மக்காச்சோளம் பயிரிட்டிருந்தாராம். அதைக் காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தாமல் இருப்பதற்காக நிலத்தைச் சுற்றி கம்பிவேலி அமைத்து, அதில் மின்சாரம் பாய்ச்சி இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்ற அவர், வீடு திரும்பவில்லை. அதையடுத்து, உறவினர்கள் சென்று பார்த்தபோது, அவர் இறந்து கிடந்தது தெரியவந்தது. புகாரின்பேரில், நாலாட்டின்புதூர் போலீசார் சென்று, சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


