வல்லநாடு பஜாரில் சாலைகளை ஆக்கிரமித்துள்ள கடைகளால் போக்குவரத்து தினமும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. திருநெல்வேலி தூத்துக்குடி நால்வழிச்சாலையில் அமைந்துள்ள பெரிய கிராமம் வல்லநாடு. கல்வி, வர்த்தகம் , வெளியூர் பயணம் மற்றும் வேலை வாய்ப்புக்காகத் தினமும் வல்லநாட்டுக்குச் சுற்றுப்புறக் கிராமங்களில் இருந்து வந்து செல்வர். இந்த ஊரில் பேருந்து நிலையம் அமைந்துள்ள முறப்பநாடு புறக்காவல் நிலையத்தில் இருந்து வடக்கு நோக்கிக் கலியாவூர் மெயின் ரோடு உள்ளது. இந்த ரோட்டில் இரண்டு பக்கங்களிலும் அமைந்துள்ள கடைகள் உள்ளாட்சி நிர்வாகம் அனுமதித்த கட்டிட எல்லைகளை மீறி முன்புறம் ஷெட்கள் அமைத்துச் சாலைகளை ஆக்கிரமித்து உள்ளன. மேலும் இந்தக் கடைகளுக்குப் பொருள் வாங்க வருவோரின் வாகனங்கள் கடைகளுக்கு முன்பாக வரிசை கட்டி நிறுத்தப்படுகின்றன. இதனால் கலியாவூர் மெயின் ரோடு ஒரு வழிப் பாதையாகவே மாறி உள்ளது. இதனால் அடிக்கடி போக்கு வரத்து பாதிப்பு ஏற்படும் நிலை தினமும் உள்ளது. காலை மாலை வேளைகளில் இச்சாலையில் பயணிக்கும் பள்ளி வாகனங்கள் மாணவர்களை விபத்தின்றிக் கொண்டு செல்ல வேண்டும் என்ற மிகுந்த பயத்துடனே செல்ல வேண்டிய அபாய நிலை உள்ளது. எனவேதயவு செய்து கடைகளுக்கு முன்பாக விரிவுபடுத்தி உள்ள சாலை ஆக்கிரமிப்புகளைச் சம்பந்தப்பட்ட ஊராட்சி மற்றும் ஊரக நெடுஞ்சாலைத்துறை உடன் நடவடிக்கைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பரிந்துரைக்க வேண்டுமென்பது பொதுமக்கள் பெரிதும் விரும்புகின்றனர்


