கோவில்பட்டியில் முன்விரோதத்தில் பெண் உள்பட 2 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வள்ளுவர் நகர் சலவை தொழிலாளர் காலனியை சேர்ந்த ஆனந்தன் மகன் பிரகதீஸ்வரன் (20). இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு கடலையூர் சாலையில் டாஸ்மாக் கடை அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது, செண்பகா நகரைச் சேர்ந்த பாஸ்கரன் மகன் சதீஷ் என்ற சதீஷ் மாதவன் உள்ளிட்ட சிலர் வழிமறித்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பினராம்.
இத்தகவலறிந்த கிழக்கு காவல் நிலைய போலீசார் அவரது சடலத்தைக் கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிந்தனர். முதல் கட்ட விசாரணையில், கடந்த ஜனவரி மாதம் சதீஷ் உள்பட 7 பேர் சலவைத் தொழிலாளர் சமுதாயக் கட்டடத்தின் முன் மது அருந்தியதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் இந்தக் கொலை நிகழ்ந்திருப்பது தெரியவந்தது.
இந்நிலையில் அன்றிரவே, சதீஷின் வீட்டிற்குள் சென்ற மர்மகும்பல் வீட்டிலிருந்த சதீஷின் தாய் கஸ்தூரி(46) , அவரது மாமனார் செண்பகராஜ்(44) ஆகியோரை கத்தியால் குத்திவிட்டு தப்பியதாம். இதில் கஸ்தூரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். செண்பகராஜை கிழக்கு காவல் நிலைய போலீசார் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கஸ்தூரி சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
இத்தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணையை துரிதப்படுத்தினர்.
பிரகதீஸ்வரன் கொலை வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் சதீஷ் என்ற சதீஷ் மாதவன் (26), பொம்மையாபுரத்தைச் சேர்ந்த வென்னிமலை மகன் வேலு என்ற முனியசாமி(19), கோவில்பட்டி புது கிராமம் முத்துக்குமார் மகன் மதன்குமார் (20), சிந்தாமணி நகர் பாலமுருகன் மகன் செல்லத்துரை (26), தெற்கு திட்டங்குளம் பசும்பொன் நகர் பாண்டி மகன் கனகராஜ் (24) ஆகிய 5 பேரையும், கஸ்தூரி கொலை வழக்கில் கோவில்பட்டி வள்ளுவர் நகர் வேல்முருகன் மகன் சரவணன் (20), கருப்பசாமி மகன் நாகராஜ் (20), சண்முகா நகர் சுப்பிரமணி மகன் பாலா (19) ஆகிய 3 பேரையும் போலீசார் திங்கள் கிழமை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.


