ஸ்ரீவைகுண்டத்தில் நவதிருப்பதி கோவில்களில் முதலாவது கோவிலான கள்ளபிரான் கோவில், நவ கைலாச கோவில்களில் ஒன்றான சிவன் கோவில், 450 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த குருசு கோவில் என்று அழைக்கப்படும் புனித சந்தியாகப்பர் ஆலயம் என பல்வேறு ஆன்மீக ஸ்தலங்கள் உள்ளதால் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து பேருந்துகளிலும் ரயில்களிலும் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஸ்ரீவைகுண்டம் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் ரயில் பயணிகளை ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, தக்கல் டிக்கெட் கொடுக்கப்படும் காலை 11 மணிக்கு திருநெல்வேலி செல்லும் பயணிகள் ரயில் திருச்செந்தூர் செல்லும் பயணிகள் ரயிலும் ஸ்ரீவைகுண்டம் வருகிறது. அந்த ரயில்கள் சென்ற பிறகே தக்கல் டிக்கெட் புக்கிங் செய்ய ஸ்டேஷன் மாஸ்டர் வருகிறார். இதனால் தட்கல் டிக்கெட்டுக்காக டோக்கன் வாங்கி உள்ள ஓரிரு பயணிகளுக்கு மட்டுமே தக்கல் டிக்கெட் கிடைக்கிறது.
இதைப் போன்று, ரிசர்வேஷன் செய்யவும் காலை 8:30 மணி முதல் 11:30 மணி வரை மட்டுமே நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற நேரங்களில் பயணிகளால் டிக்கெட் ரிசர்வேஷன் செய்ய முடியவில்லை. எனவே ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் டிக்கெட் ரிசர்வேஷன் செய்யவும் தட்கல் டிக்கெட் எடுக்கவும் பயணிகளுக்கு ஏற்பட்டு வரும் சிரமத்தை போக்க தக்கல் டிக்கெட் எடுக்கும் போது கூடுதல் பணியாளர் ஒருவரை நியமித்திட வேண்டும்.
சட்டமன்ற தொகுதியின் தலைமை இடமாகவும் தாலுகா தலைநகராகவும் உள்ள ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தை பயணிகள் முழுமையாக பயன்படுத்திடும் வகையில் அங்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தருவதுடன் டிக்கெட் ரிசர்வேஷன் எளிமையாக கிடைத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


