தருவை கடற்கரை பகுதியில் மாநில அளவிலான கடற்கரை விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் தருவை கடற்கரை பகுதியில் மாநில அளவிலான கடற்கரை விளையாட்டு போட்டிகளை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தொடங்கி வைத்து பேசியதாவது: கடலோர பகுதிகளில் உள்ள விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து அவர்களுக்குப் போட்டிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பினை ஏற்படுத்தித் தருவதற்காக கடலோரப் பகுதிகளில் கடற்கரை விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் கால்பந்து, கபடி மற்றும் கையுந்து பந்து ஆகிய விளையாட்டுகளுக்கு மாவட்டம் மற்றும் மாநில அளவில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஆண்/பெண் என இருபாலருக்கும் மாவட்ட அளவிலான போட்டிகள் இராமநாதபுரம், நாகப்பட்டிணம், கடலூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, சென்னை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் நடத்தப்படுகின்றன.
அதன்படி 2021-22ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் வாயிலாக கடந்த 26.02.2022 அன்று மாவட்ட அளவிலான கடற்கரை விளையாட்டு போட்டிகள் தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் கடற்கரையில் வைத்து நடைபெற்றது. மாவட்ட அளவில் வெற்றி பெற்ற அணிகளுக்கு மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் 02.04.2022, 03.04.2022 ஆகிய நாட்கள் தருவைக்குளம் கடற்கரையில் வைத்து நடைபெறுகிறது. இதில் 10 மாவட்டங்களில் இருந்து வீரர், வீராங்கனைகள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளார்கள். கடற்கரை கால்பந்து விளையாட்டில் 5 வீரர்களும், கடற்கரை கபாடி போட்டியில் 6 வீரர்களும், கடற்கரை கையுந்துப் போட்டியில் 2 வீரர்களும் கலந்துகொள்வார்கள்.
மாநில அளவிலான கடற்கரை விளையாட்டு போட்டியில் முதலிடம் பெறுபவர்களுக்கு ரூ.3000, இரண்டாம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.2000, மூன்றாமிடம் பெறுபவர்களுக்கு ரூ.1000 வழங்கப்பட உள்ளது. தூத்துக்குடி தருவை மைதானத்தில் 26ம் தேதி போட்டிகள் நடத்தப்பட்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு முழுவதும் இருந்து வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த போட்டியில் கைப்பந்து, கால்பந்து, கபடி 3 போட்டிகளில் 300க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். போட்டிகளில் அனைவரும் வெற்றி பெற விரும்புகிறேன். போட்டிகளில் வெற்றி பெறுவதைவிட கலந்துகொள்வதுதான் முக்கியமானது. தருவைகுளம் தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு அழகிய கடற்கரை உள்ள கிராமம். இங்குள்ள கடல் அமைதியாக இருப்பது மாதிரி இங்குள்ள மக்களும் அமைதியானவர்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் முன்னோடி மீனவர்கள் தருவைகுளத்தை சேர்ந்தவர்கள். விளையாட்டு வீரர்களுக்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
தூத்துக்குடியை சேர்ந்தவர்கள் எங்கு சென்றாலும் சிறப்பாக செயல்படுவார்கள். காலையில் எழுந்தவுடன் முதல் 20 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதன்வாயிலாக உடலும், உள்ளமும் சுறுசுறுப்பாக இயங்கும். அன்றாடம் உடற்பயிற்சி செய்வதினால் நாம் ஈடுபடும் பணிகளில் உற்சாகத்துடன் செயல்பட முடியும். விளையாட்டு வீரர்களுக்கு அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. எனவே நீங்கள் நல்ல முறையில் விளையாடி வெற்றி பெற்று அரசு வழங்கும் இட ஒதுக்கீடு வேலைவாய்ப்பினை பெறுவதோடு தொடர்ந்து விளையாட்டு போட்டியில் கலந்துகொண்டு மாவட்டத்திற்கும், மாநிலத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும். உங்களுக்கு மாவட்ட நிர்வாகம் துணையாக இருக்கும் என பேசினார்.
நிகழ்ச்சியில் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் சங்காநாராயணன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர்கள் டி.வி.பேட்ரிக் (தூத்துக்குடி), அண்டனி அதிஷ்டராஜ், (தஞ்சாவூர்), தருவைகுளம் ஊராட்சி மன்ற உறுப்பினர் காடோடி, ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் நிஷாந்தினி, கூடைப்பந்து பயிற்றுநர் ஜெயரத்தினராஜ், கால்பந்து பயிற்றுநர் நடராஜ்முருகன், ஸ்குவாஸ் பயிற்றுவர் புஷ்பராஜ் பயஸ் ஆசீர் மற்றும் பயிற்றுநர்கள், மாணவ, மாணவிகள், வீரர்கள் கலந்துகொண்டனர்.


