தூத்துக்குடியில் பொருநை இலக்கியத் திருவிழா – 2025 னை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் தொடங்கி வைத்து, விழாப்பேருரையாற்றினார்
தூத்துக்குடி மாவட்டம் வ.உ.சி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று (03.01.205), தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலக இயக்ககம் இணைந்து நடத்தும் பொருநை இலக்கியத் திருவிழா – 2025-னை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் தொடங்கி வைத்து, விழாப் பேருரையாற்றினார்.
இவ்விழாவில், அமைச்சர் பி.கீதாஜீவன் பேசியதாவது: பொருநை இலக்கியத் திருவிழா நமது தூத்துக்குடி மாவட்டத்தில் நடத்தப்படுவது நமக்கு சாலப் பொருத்தமாகும் என்று சொல்ல வேண்டும். பொருநை நாகரிகம் என்பது எப்போதும் ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தைத் தான் கூறுவார்கள். வற்றாத ஜீவ நதி என்று அழைக்கக்கூடிய தாமிரபரணி ஆறு உற்பத்தியாகுவது திருநெல்வேலியாக இருந்தாலும் அது பயணிக்கிற இடமும் கடலோடு கலக்கின்ற இடமும் தூத்துக்குடி மாவட்டத்தில் தான் இருக்கிறது.
ஆகவே 1986லிருந்து நம்முடைய தூத்துக்குடி மாவட்டம் தனியாக இருந்தாலும் இந்த நாகரிகத்தை பொருத்தவரைக்கும், இலக்கியத்தை பொருத்தவரைக்கும் நம்முடைய ஒன்றிணைந்த ஒரு ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டமாக தான் இன்று வரைக்கும் எல்லாமே பார்க்கப்படுகிறது. நாம் புத்தகத்தை வாசிக்கும் போது அதை தெரிந்து கொள்ள முடிகிறது.
ஆகவே, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களின் விழாவாக இந்த விழா நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுடைய அறிவிப்பின்படி தமிழ் மொழியை வளர்ச்சியில் பெறவேண்டும், அந்த இலக்கியங்களுக்கெல்லாம் நாம் பெருமைப்படுத்த வேண்டும், நம்முடைய பண்பாடு, பாரம்பரியம் மற்றும் பழங்கால வாழ்க்கை முறைகள் எல்லாம் எதிர்கால சமுதாய தலைவர்கள் ஆகிய நீங்கள் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஒரு உன்னத நோக்கத்தோடு நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் இந்த பொருநை இலக்கியத் திருவிழாவை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுவதற்காகவும், அதற்காகவும் நிதி ஒதுக்கீடு செய்து ஒவ்வொரு ஆண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நம்முடைய தூத்துக்குடி மாவட்டத்தில் கொண்டாடப்படுவது ஒரு பொருத்தமான நிகழ்வு என்பதை நான் இங்கு கூறிக் கொள்ள விரும்புகிறேன்.
முதலாவது பொருத்தம் பொருநை நதிக்கரையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பொருநை நதிக்கரை வரலாறாக நம்முடைய அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட சிவகளையாக இருந்தாலும் சரி, ஆதிச்சநல்லூராக இருந்தாலும் சரி அமையப்பெற்றுள்ளது நம்முடைய தூத்துக்குடி மாவட்டம் தான். இன்றும் அங்கு அகழ்வாராய்ச்சிகள் எல்லாம் நடந்து கொண்டு வருகிறது. அந்த காலத்தில் எப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள், பயன்படுத்திய உலோகங்கள், தங்க ஆபரணங்கள், நெல்மணிகள் உள்ளிட்ட பல்வேறு தொல்பொருட்கள் எல்லாம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஆகையால், பொருத்தமான ஒரு இடத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இன்னொரு பொருத்தம் நம்முடைய மாவட்ட ஆட்சியர் தமிழ் இலக்கியத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். இலக்கியத் திருவிழா என்றாலே ஒரு உற்சாகத்தோடு தன்னை ஈடுபடுத்திக்கொண்டு நிகழ்ச்சியை நல்ல முறையில் நடத்தக்கூடிய ஆட்சியராக நம்முடைய மாவட்ட ஆட்சியர் செயல்பட்டுவருகிறார்கள்.
மாவட்ட ஆட்சியர் பேசும்போது கூறுகையில் இதுபோன்ற இலக்கியத் திருவிழாக்கள் நடத்த வேண்டுமென்று திட்டமிடக்கூடிய இடத்திலிருந்து தற்போது அதனை செயல்படுத்தக்கூடிய மாவட்ட ஆட்சியராக இருக்கிறேன் என்று கூறினார்கள். மாவட்ட ஆட்சியராக இருக்கும்போது இந்நிகழ்வு தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறுவதும் சாலப் பொருத்தமாகும் என்பதை நான் இங்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன். நம்முடைய நான்கு மாவட்டத்திற்கும் இந்த தாமிரபரணி ஆறு எந்த அளவிற்கு சிறப்பு வாய்ந்தது என்பதையும், அதேபோல் நம்முடைய பல்வேறு இலக்கியங்கள் எல்லாம் இந்த பொருநை நதியினைப் பற்றி எவ்வாறு எல்லாம் கூறப்பட்டுள்ளது என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்.
ஆகையால் நீங்கள் எல்லாம் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பரிசு வாங்குவதற்காகவும் இன்னும் பல தகவல்களை அறிந்து கொள்வதற்காக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறீர்கள். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த இலக்கிய திருவிழாவில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இருந்து 12 கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் சுமார் 5800 பேர் 10 விதமான போட்டிகளில் கலந்துகொண்டு இறுதியாக 360 மாணவ மாணவியர்கள் தெரிவு செய்யப்பட்டு தற்போது நடைபெறும் பொருநை இலக்கியத் திருவிழாவில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
அதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 136 பள்ளிகளிருந்து சுமார் 860 பள்ளி மாணவ மாணவியர்கள் தங்களது போட்டிகளில் கலந்துகொண்டு 80 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு இப்பொருநை இலக்கிய திருவிழாவில் தங்களது திறமைகளை வெளிப்படுத்த காத்திருக்கிறார்கள். மிகச் சிறப்பு நிகழ்வாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 60 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு கடந்த 29.12.2024 முதல் 02.01.2025 வரை நாகம்பட்டி மனோன்மணியம் சுந்தரனார் உறுப்புக் கல்லூரியில் நடைபெற்ற சிறப்பு பயிற்சி பட்டறையில் பயிற்சி பெற்ற மாணவர்களும் இந்த பொருநை இலக்கியத் திருவிழாவில் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த இரண்டு நாட்கள் நடைபெறும் பொருநை இலக்கியத் திருவிழாவில், பல்வேறு தலைப்புகளில் நடைபெற்ற இலக்கியம் சார்ந்த போட்டிகளில் தெரிவு செய்யப்பட்டு இங்கு வந்திருக்கும் அனைத்து மாணவ மாணவியர்களும் தங்களது திறமைகளை தங்களது பேச்சாற்றலை தங்களது கவிதை திறனை தங்களது இலக்கிய திறனை வெளிப்படுத்த காத்திருக்கிறார்கள்.
பொருநை இலக்கியத் திருவிழாவில் கலந்து கொள்ள தெரிவு செய்யப்பட்டுள்ள ஒவ்வொரு கல்லூரிக்கும் சிறப்பு பரிசாக ஒரு கல்லூரிக்கு ரூ.1.5 இலட்சம் பரிசுத் தொகையாகவும், பள்ளி மாணவ மாணவியர்களுக்கு மொத்தமாக ரூ.1,80,000 பரிசுத்தொகையும் வழங்கப்படும். இந்த நிகழ்வானது மாணவர்கள் இடையே இலக்கியத் திறனை மேம்படுத்தவும், இலக்கியத்தோடு பயணிக்க ஏதுவான ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவும் மாவட்ட ஆட்சித்லைவர் அவர்களின் வழிகாட்டுதலின் படி மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்பட்டு வருகிறது.
அதுமட்டுமல்லாமல் பிற மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியாக விளங்கக்கூடிய நமது தாய் மொழியான தமிழ் மொழியை தமிழர்கள் ஒவ்வொருவரும் பாதுகாத்திட வேண்டும். நாம் எல்லாம் தமிழர்கள் தமிழ் மொழி பேசக்கூடியவர்கள் என்று நாம் பெருமை கொள்ள வேண்டும். என்றைக்குமே நம்முடைய மொழி என்கிற ஒரு உணர்வோடு இருக்க வேண்டும்.
தமிழர்களாகிய நமக்கென்று ஒரு தமிழ்த்தாய் வாழ்த்து இருப்பது எவ்வளவு பெருமை தெரியுமா? தந்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் . மிகவும் நேர்த்தியாக திட்டமிட்டு தமிழ்நாட்டுக்கு ஒரு வாழ்த்து தந்திருக்கிறார் எவ்வளவு அழகா அதை யாரும் குறை சொல்லாதபடி அந்த வரிகளை எடுத்து ஒட்டுமொத்த சமுதாயத்துக்கான தமிழன் என்று அடையாளம் கூறக்கூடிய அளவுக்கு அந்த வாழ்த்து தந்திருக்கிறது. மாணவர்கள் ஒவ்வொருவரும் சிறந்த படைப்பாளர்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் போன்றோர்களின் புத்தகங்களை வாசிக்க வேண்டும்.
அப்போதுதான் அவர்களுடைய அனுபவ அறிவுகளை நீங்கள் பெற முடியும். நாங்கள் எல்லாம் கல்லூரி படிக்கும் காலத்தில் இது போன்ற வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் ஒவ்வொரு மாணவர்களும் சிறந்த படைப்பாளர்களாக எழுத்தாளர்களாக இலக்கியவாதிகளாக உருவாக்க வேண்டுமென்ற உயர்ந்த நோக்கில் இது போன்ற வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்திருக்கிறார்கள். ஆகையால் பல்வேறு தலைப்புகளில் நடைபெற்ற இலக்கியம் சார்ந்த போட்டிகளில் தெரிவு செய்யப்பட்டு இங்கு வந்திருக்கும் அனைத்து மாணவ மாணவியர்களும் எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். மிகவும் தொன்மைவாய்ந்த மொழி தமிழ் மொழி என்பதை ஒரு சிலர் வரலாற்றை மறைக்க நினைத்தார்கள்.
ஆனால், நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் எதிர்க்கட்சியாக இருக்கும் போதும் சரி இப்போதும் சரி சிவகளை அகழ்வாராய்ச்சி மூலம் தான் தமிழ் மொழி தமிழர்களுடைய நாகரிகம் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மைவாய்ந்த நாகரிகம் என்பது உலகிற்கு பறைசாற்றக்கூடிய அளவிற்கு அந்த அகழ்வாராய்ச்சி வெளிப்படுத்தியது. ஆகவே தான் தமிழர்களுடைய நாகரிகம் பழமைவாய்ந்த நாகரிகம், தொன்மைவாய்ந்த நாகரிகம் என்று உலகிற்கு பறைசாற்றிவருகிறோம்.
உலகப் பொதுமறை நூல் என போற்றப்படும் திருக்குறளை பேரறிவு நூல் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார்கள். மாணவர்களாகிய நீங்கள் எந்தவொரு செயலையும் செய்வதற்கு முன்பு நன்கு பகுத்தாய்வு செய்தால் தான் அதனால் ஏற்படக்கூடிய நன்மை தீமைகளை அறிய முடியம். மாணவர்கள் ஒவ்வொருவரும் தொடர்ந்து புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் என்ன நோக்கத்திற்காக இந்த இலக்கிய திருவிழாவை நடத்த வேண்டுமென அறிவித்தார்களோ அவர்களின் நோக்கத்தினை மிஞ்சக்கூடிய வகையில் செயலாற்றிவரும் மாவட்ட ஆட்சியர் அவர்களை பாராட்டுகிறேன்.
உங்களின் எதிர்கால சந்ததியினர்களுக்காக வருங்கால தலைமுறையினர்களுக்காக தொன்மை வாய்ந்த தமிழர்களின் பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு, வரலாற்றுச்சின்னங்கள் மற்றும் இயற்கை வளங்களை அனைவரும் பேணிப் பாதுகாக்க வேண்டும். இலக்கியங்கள் நமக்கு கற்றுத்தந்துள்ள பாடமாகிய அனைவரையும் சமமாக மதிக்க வேண்டும். குறிப்பாக பாலின வேறுபாடு இல்லாமல் அனைவரும் சமமாக சகோதர சகோதரிகளாக வாழ வேண்டும் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து, வரலாற்றுச் சிறப்பு மிக்க புத்தகங்கள் மற்றும் பண்டைய காலங்களில் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள் குறித்து மாணவர்கள் அறிந்து பயன் பெறும் வகையில் அமைக்கப்பட்டிருந்த புத்தகம் மற்றும் நாணயக் கண்காட்சியினை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் நேரில் பார்வையிட்டார்.
இவ்விழாவில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன், மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமன், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், வருவாய் கோட்டாட்சியர் ம.பிரபு, துணை ஆட்சியர் (பயிற்சி) த.சத்யா, முதன்மை நூலகர் மற்றும் தகவல் அலுவலர் (அண்ணா நூற்றாண்டு நூலகம், சென்னை) முனைவர்.செ.காமாட்சி, எழுத்தாளர்கள், படைப்பாளர்கள், பேச்சாளர்கள், பேராசிரியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் மாணவ – மாணவியர்கள் பலர் கலந்துகொண்டனர்.


