வீரபாண்டிய கட்டபொம்மன், தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாளையக்காரர் ஆவார். இவர் தெலுங்கு மொழி பேசும் ராஜகம்பளம் நாயக்கர் இனத்தில் பிறந்தவர். இவருடைய முன்னோர்கள் முகமதியர்களின் படையெடுப்புக்குப்பின்பு கம்பிளி ராஜ்ஜியம் இழந்து விஜயநகரம் உருவாக்கினர். பின் சோழ நாட்டிலும், பாண்டிய நாட்டிலும் வாழ்ந்து வந்தனர். பின்பு முகமதியர்கள் சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் மீது தாக்குதல் நடத்தி நாட்டை கைப்பற்றி 50 ஆண்டுகள் ஆட்சி நடத்தினர். பாண்டிய நாட்டில் கோவில்கள் இடிக்கப்பட்டன. மதுரை மீனாட்சியம்மன் கோவில் அடைக்கப்பட்டது. விஜயநகரப் பேரரசின் படைகள் வந்து, அவர்கள் 3 நாடுகளையும் கைப்பற்றினர். பின்பு பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட பாண்டிய மன்னன், வீர பாண்டிய கட்டபொம்மன் முன்னோர்களின் வீரத்தைப் போற்றி பாஞ்சாலங்குறிச்சியைப் பரிசாக வழங்கினார்.
சனவரி 3, 1760 அன்று ஆறுமுகத்தம்மாள் – திக்குவிசய கட்டபொம்மு தம்பதியருக்கு, பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன் பிப்ரவரி 2, 1790 அன்று 47 வது பாளையக்காரராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அப்போது அவருக்கு வயது முப்பது ஆகும். வீரபாண்டிய கட்ட பொம்மனுக்கு குமாரசாமி என்ற ஊமைத்துரை, துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும், ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் இருந்தனர். இவரது துணைவியார் சக்கம்மாள். இவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லை. இவர் 9 ஆண்டுகள், 8 மாதம், 14 நாட்கள் அரசுப் பொறுப்பிலிருந்தார்.
அழகிய வீரபாண்டியபுரம் எனும் ஊரில் (இன்றைய ஒட்டப்பிடாரம்) ஆட்சிபுரிந்து வந்த ஜெகவீரபாண்டியனின் (நாயக்க வம்சம்) அவையில் அமைச்சராகப் பொம்மு என்கிற கெட்டி பொம்மு இடம்பெற்றிருந்தார். இவரது பூர்வீகம் ஆந்திர மாநிலம், பெல்லாரி ஆகும். வீரமிகுந்தவர் என்ற பொருளைத் தெலுங்கில் உணர்த்தும் கெட்டி பொம்மு எனும் சொல் நாளடைவில் கட்டபொம்மு என்று மாறி பின் தமிழில் கட்டபொம்மன் என்ற சொல்லாயிற்று. ஜெகவீரபாண்டியனின் மறைவிற்குப்பின் அரசகட்டிலில் ஏறிய கட்டபொம்மு பின், ஆதி கட்டபொம்மன் என்று மக்களால் அழைக்கப்பட்டார். இவரே பொம்மு மரபினரின் முதல் கட்டபொம்மன் ஆவார்.
இந்த பொம்மு மரபில் வந்தவர்களே (திக்குவிசய கட்டபொம்மன்) ஜெகவீர கட்டபொம்மன், ஆறுமுகத்தம்மாள் தம்பதியர். இவர்களின் புதல்வரே வீரபாண்டியன் எனும் இயற்பெயர் கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மனாவார்.இவர் நாயக்க வம்ச அரசாட்சியில் தொடர்ந்து வருவதால் பொம்மு நாயக்கர் என்று மக்களால் அழைக்கப்பட்டார்.


