தூத்துக்குடி பழைய பேருந்து நிலைய வளாகத்தில் வெற்றிப் பயணத் திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று (02.10.2026) சென்னையில், தமிழ்நாட்டின் மதிப்புமிகு மகளிரான நம் பாட்டி, அம்மா, அக்கா, தங்கைகள், பெண் குழந்தைகள் மற்றும் திருநர் அனைவருக்கும் கட்டணமில்லா வெற்றிப் பயணம் திட்டத்தினை துவக்கி வைத்ததைத் தொடர்ந்து, தூத்துக்குடி பழைய பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், கலந்து கொண்டு பேருந்து சேவையினை துவக்கி வைத்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் காந்தி ஜெயந்தி அக்டோபர் 2 ம் தேதி தமிழ்நாட்டின் மதிப்புமிகு மகளிரான நம் பாட்டி, அம்மா, அக்கா, தங்கைகள், பெண் குழந்தைகள் மற்றும் திருநர் அனைவருக்கும் கட்டணமில்லா வெற்றிப் பயணம் திட்டம் துவங்கப்படும் அறிவித்து இருந்தார்கள்.
அதன் அடிப்படையில் இன்றைய தினம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வெற்றி பயணம் திட்டம் சேவை துவக்கி வைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 83 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தனிநடையாக 723 பேருந்துகள் நாள் ஒன்றுக்கு இயக்கப்படவுள்ளன.
இத்திட்டத்தினால் மகளிரின் பயணச் சுதந்திரம், அவர்களின் பொருளாதாரச் சுதந்திரத்திற்கும் குடும்பங்களின் முன்னேற்றத்திற்கும் அடித்தளமாக இருக்கும். தற்போது செயல்படுத்தப்பட்டுவரும் மகளிர் கட்டணமில்லாப் பயணத் திட்டத்தில் மாநகரம், நகர்ப்புறங்களில் சாதாரண மற்றும் மலைப்பகுதிப் பேருந்துகளில் 40 கி.மீ. வரை மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறது. Express, LSS, டீலக்ஸ் (Deluxe) பேருந்துகள் மற்றும் புறநகர்ப் பேருந்துகளில் (Mofussil) கட்டணமில்லாப் பயணம் அனுமதிக்கப்படுவதில்லை.
மேலும், மாவட்டத்தில் எந்தப் பகுதியிலும் வசிக்கும் ஒரு மகளிரும் போக்குவரத்துக் கட்டணத்தால் தமது வாய்ப்புகளை இழக்கக்கூடாது என்ற சமூகநீதிச் சிந்தனையை இவ்வரசு முதன்மையாகக் கொண்டு, மகளிர் கட்டணமில்லாப் பயணத் திட்டத்தை விரிவுபடுத்தி, பெருமளவில் பயனளித்திடும் விதமாக, திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.
வெற்றிப் பயணம் திட்டத்தில் தூத்துக்குடி நகரில் 14 பேருந்துகள், புற நகரில் 10 பேருந்துகள், ஸ்ரீவைகுண்டம் 11, கோவில்பட்டி 18, விளாத்திகுளம் 19, திருச்செந்தூர் 7, சாத்தான்குளம் 6 என மொத்தம் 85 பேருந்துகளில் மகளிர் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என்று த.நா.அ.போ.க. பொது மேலாளர் இராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா, சார் ஆட்சியர்விவேக் யாதவ், தூத்துக்குடி த.நா.அ.போ.க. பொது மேலாளர் இராமகிருஷ்ணன், தூத்துக்குடி வட்டாட்சியர் திருமணி ஸ்டாலின், கோட்ட மேலாளர் வேல்முருகன், கிளை மேலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


