ஸ்ரீவைகுண்டம் அருகே 2.28 கோடி ரூபாய் மதிப்பில் சமத்துவபுரம் சீரமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த 10 வருடமாக பராமரிக்கப்படாமல் இருந்த 149 சமத்துவபுரங்களை 190 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார்.
இதற்கிடையில் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வசவப்பபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட சமத்துவபுரத்தில் உள்ள 100 வீடுகளில் சீரமைக்க வேண்டும், அங்கு உள்ள பூங்காக்கள், சமுதாய நலக்கூடத்தையும் சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கடந்த திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இந்த நிலையில் சமத்துவபுரம் மேம்பாட்டு நிதியில் இருந்து 2.28 கோடி ரூபாய் மதிப்பில் முதற்கட்டமாக 30 வீடுகளை சீரமைக்கும் பணி கடந்த 2 தினங்களாக நடந்து வருகிறது.
இந்த பணிகளை பார்வையிடுவதற்கு இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் நேரில் ஆய்வு மேற்கொள்ள வருகை தந்தார். அவர் சமுதாய நலக்கூடத்தில் நடந்து வரும் பணிகளை பார்வையிட்டார். தொடர்ந்து சமத்துவபுரத்தில் உள்ள வீடுகளை நேரில் சென்று பார்வையிட்டார்.
தொடர்ந்து அப்பகுதி மக்கள் எங்கள் பகுதிக்கு பேருந்து வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய சேர்மன் கோமதி ராஜேந்திரன், பிடிஓ பாக்கியலீலா, செல்வி, வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


