கோவில்பட்டியில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் கலை இலக்கிய போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம்,எஸ்.எஸ்.டி.எம் கல்லூரி,புனித ஓம் கல்வி நிறுவனங்கள், கோவில்பட்டி வாசகர் வட்டம் சார்பில் காந்தி மண்டபத்தில் மே-21 முதல் ஜூன் – 9ம் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 26ம் தேதி ஓவியப் போட்டியும், 27ம் தேதி கட்டுரைப் போட்டியும், 28ம் தேதி திருக்குறள் எழுதும் போட்டியும் நடந்தது.
இதில் 100க்கு மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் முதலிடம் பெற்றவர்களுக்கு ரூபாய் 1000 மதிப்புள்ள புத்தக பரிசு கூப்பனும், 2ம் இடம் பெற்றவர்களுக்கு 500 மதிப்புள்ள புத்தக பரிசு கூப்பனும், 3ம் இடம் பெற்றவர்களுக்கு ரூபாய் 200 மதிப்புள்ள புத்தக பரிசு கூப்பனும் வழங்கப்பட்டது.பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழும், புத்தகங்களும் வழங்கப்பட்டது.
பரிசளிப்பு விழாவிற்கு புனித ஓம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் லட்சுமணப் பெருமாள் தலைமை வகித்தார்.கோவில்பட்டி வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர் முத்து முருகன்,ரோட்டரி சங்க உறுப்பினர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கத்தலைவர் ரவிவர்மா அனைவரையும் வரவேற்றார்.
மாடர்ன் ஹார்டுவேர்ஸ் நிறுவன உரிமையாளர் ரமேஷ் கலந்து கொண்டு கலை இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் புத்தக பரிசு கூப்பன்களை வழங்கி பேசினார். இதில் தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்க நிர்வாகிகள் ரமேஷ், ஆவுடையப்பன், காளிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர் முடிவில் புத்தக விற்பனையாளர்கள் சங்க நிர்வாகி ராஜபாண்டி நன்றி கூறினார்.


