சாத்தான்குளம் அருகே கொலை வழக்கில் 24 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள கார் டிரைவரை தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சாத்தான்குளம் அருகே உள்ள இடைச்சிவிளை விவேகானந்தபுரத்தை சேர்ந்தவர் பீட்டர் ஜெசுமரியான் மகன் விஜேந்திரன். கார் டிரைவர். கடந்த 2001 ஆம் ஆண்டு இடைச்சிவிளையில் ஏற்பட்ட பிரச்னையில் 3 பேர் கொலை செய்யப்பட்டனர். இது குறித்து தட்டார்மடம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் விஜேந்திரன் 2 ஆவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
மற்ற குற்றவாளிகள் எல்லாம் கைது செய்யப்பட்ட நிலையில், விஜேந்திரன் தலைமறைவானார். அதன் பிறகு நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனை அடுத்து கடந்த 2006 ஆம் ஆண்டு சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. போலீசார் தேடி வந்த நிலையில், அவர் எங்கே இருக்கிறார் என்று இன்னும் தெரியவில்லை.
கடந்த 24 ஆண்டுகளாக எந்தத் தகவலும் இல்லாததால், அவரை தேடப்படும் குற்றவாளியாக சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்றம் தற்போது அறிவித்துள்ளது. அவர் குறித்து தெரிந்தவர்கள் தட்டார்மடம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கலாம் என போலீசார் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


