கோவில்பட்டி பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். 508 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில்வேல் முருகன் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தபோது வேலாயுதபுரம் மதுபான கூடம் அருகே சென்று கொண்டிருந்த பைக்கை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் மது பாட்டில்கள் இருப்பது தெரிய வந்தது.
விசாரணையில், மூப்பன்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த சமுத்திரராஜன் மகன் மதன்குமார் (28), காந்திநகர் முதல் தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் சக்திவேல் (44) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிந்து 2 பேரையும் கைது செய்து, உங்களிடம் இருந்த 100 மது பாட்டில்கள், ரொக்கப் பணம் ரூ. 3580/-மற்றும் விற்க பயன்படுத்தப்பட்ட பைக்கையும் பறிமுதல் செய்தனர்.
இதுபோல மந்தித்தோப்பு மதுபான கூடம் அருகே சட்ட விரோதமாக மதுவிற்பனை நடைபெறுவதாக காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதனுக்கு கிடைத்த தகவலையடுத்து அவரது தலைமையில் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன், உதவி ஆய்வாளர்கள் செந்தில்குமார், வேல்பாண்டியன் தலைமையில் தனிப்படை காவலர்கள் அருண், செல்லத்துரை மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட ஈடுபட்ட ஸ்ரீராம் நகரை சேர்ந்த சண்முகையா மகன் இருளப்பனை (52) கைது செய்த போலீஸார் அவரிடம் இருந்த 408 மது பாட்டில்கள், மது விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


