சாத்தான்குளம் பகுதியில் உரங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியில் விவசாய பணிகளே பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதியில் முக்கிய பயிர்களாக நெல். பருத்தி, கடலை மற்றும் வாழை, முருங்கை, தென்னை விளங்குகிறது. சாத்தான்குளம் பகுதியில் 2போகம் விளைவித்து விவசாய பணிகளை தீவிரம் காட்டியுள்ளனர். தற்போது சாத்தான்குளம் பகுதியில் கடந்த 1 மாதமாக யூரியா உள்ளிட்ட முக்கிய உரங்கள் கூட்டுறவு மற்றும் தனியார் உரக்கடைகளிலும் இருப்பு இல்லை. உரங்கள் கிடைக்காததால் நெல், வாழை மற்றும் முருங்கைக்கு தெளிக்க முடியாமல் விவசாயிகள் சிரமத்தில் உள்ளனர்.
உரங்கள் இப்பகுதியில் கிடைக்காததால் பிற பகுதிக்கு சென்று விவசாயிகள் அதிக விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஏழை விவசாயிகள் வேறு எங்கும் சென்றும் வாங்கி முடியாமல் தவிப்பதால் பயிர்கள் வாடும் நிலைக்கு வந்துள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கூட்டுறவு மற்றும் தனியார் உரக்கடைகளில் உரம் குறித்து கேட்டால் உரம் இருப்பு இல்லை. ஆர்டர் செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து விவசாயி கடாட்சபுரம் ஞானமுத்து கூறுகையில், விவசாயத்துக்கு முக்கியமானது உரம்தான். அதுவும் தற்போது சாத்தான்குளம் பகுதியில் இருப்பு இல்லாமல் இருப்பது மிகவும் கவலை அளிக்கும் வகையில் உள்ளது.. ஆதலால் மாவட்ட ஆட்சியர் இதனை கவனித்து சாத்தான்குளம் பகுதியில் அனைத்து உரங்களும் தட்டுப்பாடு இல்லாமல் விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


