நாலுமாவடி தேவனுடைய கூடாரத்தில் நடைபெற்ற புத்தாண்டு வாக்குத்தத்தக் கூட்டத்தில் மோகன் சி. லாசரஸ் பங்கேற்று சிறப்பு பிரார்த்தனை செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் சார்பில் தேவனுடைய கூடாரத்தில் ஆண்டுதோறும் புத்தாண்டு வாக்குத்தத்தக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதேபோல் 2025 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு வாக்குத்தத்தக் கூட்டம் நேற்று (புதன்கிழமை) மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை தேவனுடைய கூடாரத்தில் வைத்து நடைபெற்றது.
இதில் இயேசு விடுவிக்கிறார் ஜெபக்குழுவினர் புத்தாண்டு வாக்குத்தத்த பாடல்களைப் பாடினர். இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி. லாசரஸ், “நான் உன்னிடத்தில் வந்து, உன்னை ஆசீர்வதிப்பேன். (யாத்திராகமம் 20: 24 ) என்ற வேத வசன தலைப்பில் புத்தாண்டு வாக்குத்தத்த ஆசீர்வாத செய்தியளித்தார். பின்னர் தேசத்தின் மக்களுக்காகவும், வியாதியஸ்தர்களுக்காகவும், புத்தாண்டு ஆசீர்வாதத்திற்காகவும் சிறப்பு பிரார்த்தனை செய்தார்.
இக்கூட்டத்தில் தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனன் கலந்து கொண்டார். கூட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட ங்களில் இருந்து திரளான மக்கள் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்ததும் வெளியூர்களுக்கு பொது மக்கள் திரும்பிச்செல்வதற்கு அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவன பொது மேலாளர் செல்வக்குமார் மற்றும் ஜெபக்குழுவினர் செய்திருந்தனர்.


