மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க்கூடல் 144 வது நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் இடைச்சங்கச் சுவடுகள் நிறைந்த தாமிரபரணிக்கரை என்ற தலைப்பில் தொல்லியல் ஆர்வலர் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு பேசினார்.
அவர் பேசும் போது கொற்கையில் இடைச்சங்கம் இருந்த சுவடுகளை சுட்டிக்காட்டி பேசினார். ஆதிச்சநல்லூரில் புதைந்து கிடக்கும் தகவல்களை ஒவ்வொரு தமிழரும் உலகிற்கு எடுத்துரைக்க வேண்டும். இடைச்சங்கம் இருந்து கீழடியை விட முந்தைய நாகரீகம் ஆதிச்சநல்லூர், தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகளை, போன்றவை இந்த நாகரீகத்துக்கு முந்தையது. ஆதிச்சநல்லூர் இறந்த மனிதர்களை புதைத்த இடங்களில் பல்வேறு தகவல்கள் புதைந்து கிடக்கிறது. சுகாதரத்துக்கு சுமார் 3500 வருடங்களுக்கு முன்பே தமிழர்கள் முக்கியத்துவம் கொடுத்து உள்ளார்கள். ஆகவே தான் இறந்தவர்களை முதுமக்கள் தாழிகளில் வைத்து புதைத்து இருக்கிறார்கள். சங்க கால பாடல்கள் உண்மை என்று உணர்த்தும் விதமாக பல்வேறு நிகழ்வுகள் ஆதிச்சநல்லூரில் நடந்துள்ளது. தொல்லியல் துறையினர் சங்க கால பாடலில் பாடப்பட்டது உண்மை என்பதை நிருபணம் செய்து வருகிறார்கள். சுமார் 124 வருடங்களுக்கு முன்பே அலெக்ஸாண்டர் இரியா தாமிரபரணி கரையில் 37 தொல்லியல் தளங்களை அடையாளம் காட்டி விட்டு சென்று இருக்கிறார். நாம் தற்போது சுமார் 7 இடங்களில் மட்டுமே ஆய்வு மேற்கொண்டுள்ளோம். மேலும் அனைத்து இடங்களிலும் ஆய்வு செய்ய வேண்டும். கீழடி அருங்காட்சியம் , கீழடியில் மற்றொரு இடத்தில் ஆய்வு செய்து எடுத்த பொருள்களை காட்சி படுத்திய இடமாக உள்ளது. ஆனால் மத்திய அரசு ஆதிச்சநல்லூரில் இந்தியாவிலேயே முதல் முதலாக சைட் மியூசியத்தினை அமைத்துள்ளது. உள்ளது உள்ளபடியே தொல்லியல் ஆய்வு செய்த இடத்தில் கண்ணாடி போட்டு சைட் மியூசியத்தினை அமைத்துள்ளார். இது தமிழர்களுக்கெல்லாம் பெருமை. இதை ஒவ்வொரு தமிழரும் கண்டு களிக்கவேண்டும். எனவே தாமிரபரணி கரையில் உள்ள தொல்லியல் தளங்களில் புகழை உலகிற்கு எடுத்துச் சொல்ல வேண்டும். தற்போது மாநில அரசு திருநெல்வேலியில் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய இடங்களில் ஆய்வு செய்த பொருள்களை அருங்காட்சியத்தில் காட்சி படுத்த உள்ளனர். இது கீழடி அருங்காட்சியத்தினை போல மூன்று மடங்கு பெரியதாக அமைய உள்ளது. வருகிற மார்ச்சு மாதம் அதை திறக்க உள்ளார்கள். இந்த காலம் தொல்லியலின் பொற்காலம், தமிழர்கள் பாராம்பரியத்தினை பறைசாற்றும் காலம். ஆகவே தான் நமது அரசு நமக்கு வேண்டிய உதவிகளை செய்கிறது. அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வோம்” என்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் ஆய்வு வளமையர்முனைவர் ஜ.ஜான்சிராணி வரவேற்று பேசினார். மதுரை உலகத் தமிழச்சங்கம் ஆய்வறிஞர் முனைவர் சு. சோமசுந்தரி நன்றி கூறினார்.


