ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பத்திரிக்கை நிருபராகவும் ஊடகவியலாளராகவும் பணியாற்றி வருபவர் சுடலை மணிச்செல்வன். இவர் காமராசு செல்வன் என்ற பெயரில் நாவல்கள் எழுதி வருகிறார். இவர் எழுதி தினமலரின் தாமரை பிரதர்ஸ் மீடியாவில் வெளிவந்த குடிமவன் (அவன் இவனல்ல) நூல் விமர்சனம் இன்று தினமலரில் தமிழகம் முழுவதும் வெளிவந்துள்ளது. நூல் வேண்டுவோர் கீழ்கண்ட எண்ணில் தொடர்ப்பு கொண்டு நூலை பெற்றுக்கொள்ளவும்.
குடிமவன் ( இவன் அவன் அல்ல )
ஆசிரியர் காமராசு செல்வன்
வெளியீடு தாமரை பிரதர்ஸ் மீடியா பி. லிட்
டோல் ஃப்ரீ 1800 425 7700
75500 09565
பக்கம் 192
விலை ரூ.250
” அந்தத் தெற்கு வீட்டு அக்கா மட்டும் கூட்டாஞ்சோறு போட்டுச்சு, நீரும் ராசுவும் வேணா அதை சாப்பிடுங்க. நான் வேணா அந்த பழைய சோத்தை மதியம் வச்ச புளித் தண்ணி வச்சு சாப்பிடுகிறேன் ” என்றாள். இந்த கதையின் நாயகி கனி.
ஏளா கனி… இருக்கத எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் சாப்பிடுவோம். அதுக்கு மேல பசிச்சா பழையதை கொஞ்சம் சாப்பிடுவோம்”. என்றான் கதாநாயகன். இவர்கள் மத்தியில் மகன் ராசு.
நெல்லை தமிழில் எழுதப்பட்ட இந்த புத்தகம் மிகவும் ரசித்து படிக்க வைக்கிறது என்ன அருமையான நெல்லை தமிழ்! நெல்லை மண்ணில் பிறந்தவர்களுக்கு, குடிமவன் என்ற சொல், யாரைக் குறிக்கும் என்பது நன்றாகவே தெரியும். மிக மிக கஷ்டமான வேலை, இறந்து போன ஒருவனுக்கு அந்திமக்கிரியை செய்வதுதான். அவனே எரித்து சாம்பலை அள்ளி, உடையவர் கையில் கொடுத்தால்தான் கூலி. அதிலும் அந்த காலத்தில் பத்து, இருபதுக்காக இந்த தொழிலை செய்தவர்கள் பட்டப்பாடு நேரில் பார்த்தவர்களுக்கு தான் தெரியும். அவர்களை உதாசீனப்படுத்துவது, கேவலமாக பேசுவது, கேலி செய்வது… இதையெல்லாம் பொறுத்துக் கொண்டு ஏன் இந்த ஜாதியில் பிறந்தோம் ஏன் இந்த தொழிலுக்கு வந்தோம் என வெம்பி போனவர்கள் ஏராளம்.
அவர்களது மனக்குமுறலை வெளிப்படுத்திய அவர்களின் வாரிசுகள் ஆவது படித்த பட்டம் பெற்று மாற்று தொழிலுக்கு போக வேண்டும் என்ற ஆவல் நிறைவேறாமலேயே மடிந்து போனதை எழுத்தாளர் காமராசர் செல்வன் சுவைப்பட சொல்லியுள்ளார்.
அவரது முதல் நூல் என்றாலும் ஏதோ நூறு புத்தகங்கள் எழுதிய அனுபவம் இதில் தெரிகிறது.
குடிமவனை ரசித்து படித்தவர்கள், எந்த ஜாதியையும் எந்த தொழில் செய்பவனையும் கேவலப்படுத்துவதற்கு அஞ்சுவார்கள் என்பது உறுதி.
– தி. செல்லப்பா


