அன்று இரவு செல்வியும் காளியும் தனது வீட்டில் படுத்துக்கிடந்தனர்.
செல்வி சொன்னாள், “இனிமேல் தாமிரபரணியை பற்றி கவலை இல்லை காப்பாற்றி விடலாம்”. அவன் மனது சந்தோசத்துடன் குதுகலித்தது.
“காப்பாற்றி விடலாம். ஆனால் இதுவரை கூறு போட்டு இருக்கிறார்களே. அந்த இடத்தில் பழைய படி மணல் வருமா? இல்லை அழிக்கப்பட்டட ஊற்றுத்தான் மீண்டும் வருமா? “ காளி கேட்ட கேள்வியில் நியாயம் இருந்தது.
இருவரும் சிந்தித்தார்கள்.
செல்வியை நன்றாக பார்த்தான். அந்த வேளையிலும் அவள் அழகாக தெரிந்தாள். இதுவரை அவளது இளமை எனும் பூங்காற்றில் பூபாளம் இசைக்க வில்லை. பாவம் திருமணம் ஆகி இத்தனை நாள் ஆகி விட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் தொடதே இல்லை. இந்த என்ன வேள்ளி. தாமிரபரணி வேள்வி . இதை வெளியே சொன்னால் யாரும் நம்புவார்களா?
திருமணம் மனதுக்கு மட்டும் தான். ஆனால் அவனால் செல்வியை மனதால் நேசித்தும் உடலால் ஒன்று கூட முடியவில்லை. காரணம். தாமிரபரணி பிரச்சனை தீர வேண்டும். அதற்காக இந்த வேள்வியை நடத்துகிறார்கள். தவறு வேள்வி என நினைத்து தங்களை தங்களே தண்டனை கொடுத்து கொண்டிருக்கிறார்கள்.
நினைத்துப் பார்த்தால் இது தேவைதானா என்பது போல கூடத்தோன்றும்.
நதியை அழித்தவர்கள் இவர்களா? இவர்கள் ஏன் தங்களை தானே அழித்துக்கொள்ள வேண்டும்.
ஆனால் நியதி அதுவல்ல. என்றைக்கு இருந்தாலும் நதியை காப்பாற்றிய பிறகே தங்களுக்குள் எதுவென்றாலும். இந்த நதி ஆரோக்கியமாக இருக்கும் இடத்தில்தான் தங்களுக்கு குழந்தை பிறக்க வேண்டும். அதற்கு முன்பு இந்த பூமியில் தன் குழந்தை கூறு போடப்பட்ட தாமிரபரணியை பார்க்க பிறந்து விடக்கூடாது.
இருவரும் அப்படியே நினைத்தனர்.
அன்றும் வெண்ணிலவு எட்டிப்பார்த்தது. நிலாகாயும் பொழுதில் இந்த ஜோடி மட்டும் தானே காய்ந்து கொண்டிருந்தது.
இது என்ன நியதி. யோசித்து பார்த்தாள். இது ஒரு கிறுக்கு என்றே சொல்லாம். ஆனால் தாமிரபரணி மேல் உள்ள பற்றால் ஏற்ப்பட்ட கிறுக்கு.
இதை எப்படி சொல்வது?.
நதியை காப்பாற்ற நீங்கள் இருவர் நினைத்தால் மட்டும் போதுமா?. இந்தநாடே விழித்துக்கொள்ளவேண்டும். தாமிரபரணி தோன்றும் பொதிகை மலையில் இருந்து புன்னக்காயல் வரை இருக்கும் கரையில் வாழ்கின்ற ஒவ்வொரு மனிதனும் நினைக்க வேண்டும். தாமிரபரணி தண்ணீரை பருகிக்கொண்டிருக்கிற மாவட்டத்தில் உள்ள மக்கள் நினைக்கவேண்டும். அதோடு மட்டுமல்லாமல் இந்த நதியில் பிறந்து உலகம் முழுவதும் சென்று வணிகம் பார்த்து வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களும் நினைத்து பார்க்கவேண்டும். அதை விட்டு விட்ட இந்த அப்பாவி ஜீவன்கள் இரண்டும் தனக்குதானே இப்படியொரு விதியை போட்டு வைத்துக்கொண்டார்களே. பாவச் ஜென்மங்களோ. இல்லை பழியை சுமக்கும் ஜென்மங்களோ.
வெளியே தவளை சத்தம். கேட்டது. விவசாயிகளை நோக்கி விவசாயம் செய்ய தயார் ஆகுங்கள் என குறிப்பாக சொல்கிறது. அந்த விவசாயமும் முறையாக நடைபெறவில்லையே. மூன்று போகம் விளைந்த சாகுபடி கொஞ்சம் கொஞ்சமாக குறைகிறதே. பிசான சாகுபடி மட்டும் செய்தால் போதும் என்று நினைத்த விவசாயிகளுக்கு அதுவும் கேள்விக்குறியாக மாறி விட்டதே.
கிராமத்தில் சொல்வார்கள். பிசான சாகுபடிக்கு வட கிழக்கு பருவமழை பெய்ய ஆரம்பித்து விட்டது. அப்படி பெய்தால் உடனே விவசாயிகள் கலப்பையை எடுத்துக் கொண்டு கழனிக்கு சென்று வேலையை ஆரம்பிக்க வேண்டும். எனவே தவளை போடும் சத்தம் “கம்பெடு கலப்பையெடு” என்று கூவுவது போலவே இருக்கும். என்பார்கள் முன்னோர்கள். தவளையின் சத்தம் விவசாயிகளை தட்டியெழுப்பும் சத்தம். அதே வேளையில் குளிரில் வாட்டி வதைக்கும் இளசுகள், தங்கள் செல்ல துணையுடன் இன்ப சல்லாபம கூடும் வேளையாகவும் மாறி விடும்.
அந்த சத்தம் கூட இவர்களின் இளமையை கிள்ளவில்லை போலும். இவர்கள் அருகில் அருகில் இருந்தும் கூட உடல் பரிசத்தினை ஏற்படுத்திக் கொள்ளவில்லை அவர்கள் கண் முன் தாமிரபரணி தாய், தன்னை இழந்து அழுது கொண்டு என்னை காப்பாற்றுங்கள் என சொல்வது போலவே நின்று கொண்டிருந்தாள்.
மொத்தத்தில அவள் தங்களுக்கு மட்டும் தாயல்ல, இந்த வருங்கால சன்னிதிகளுக்கும் தாய். எனவே அவளை காப்பாற்றும் விதமாக இந்த விரதம் இருக்கிறார்கள் இந்த தம்பதிகள். அது சரியோ தவறோ. அவர்களுக்கு சரி என்றே பட்டது.
நன்றாகவே விடியட்டும் என இருவரும் காத்திருந்தார்கள்.
மறு நாள்.
தாமிரபரணி கரையில் குலசேகரன் தாத்தாவை போய் பார்த்தார்கள். அனைத்து பத்திரிக்கையிலும் தாமிரபரணி பற்றி செய்திதான். அதை பார்த்து சந்தோசப்பட்டார்கள். ஒவ்வொரு பேப்பரிலும் ஒரு பேப்பரை டவுணுக்கு போய் வாங்கி பைல் செய்து கொண்டார்கள்.
இனி தாமிரபரணிக்கு பிரச்சனை இல்லை என சந்தோசப்பட்டுக்கொண்டனர்.
மீண்டும் தொண்டு நிறுவன இயக்குனர் தாணுலிங்கம் அய்யா தலைமையில் ஒரு மீட்டிங் நடந்தது.
தொடர்ந்து தாமிரபரணியை எப்படி காப்பாற்ற வேண்டும். தூசிகளை ஆற்றில் கொட்டு வதை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சாக்கடைகள் அங்காங்கே கலக்கிறது. அதை கலக்க விடக்கூடாது. அதற்கு என்ன செய்யலாம். இவர்கள் திட்டம் இப்படியாக நடந்துக் கொண்டிருந்தது.
இதற்கிடையில் ஆய்வுக்கு வந்தவர்கள் அறிக்கை தயார் செய்தனர். தாமிரபரணியில் எத்தனை இடத்தில் கூறு போடப்பட்டது. எத்தனை இடங்கள் பிரச்சனையில் உள்ளது. ஆற்று மணலை அள்ளிய காரணத்தி£ல் ஊற்றுக்கள் எப்படி அழிக்கப்பட்டது. விதி மீறி என்னென்ன செய்தார்கள். எத்தனை இடத்தில் விதி மீறப்பப்பட்டது. இதனால் அரசுக்கு இழப்பு எவ்வளவு. அந்த இழப்பை யார் சரிக்கப்பட்ட வேண்டும். யாருக்கு தண்டனை கொடுக்க வேண்டும். இழப்பை ஈடுகட்ட யாரிடம் வசூல் செய்ய வேண்டும். இது போன்ற மணல் குவாரிகளை தொடர்ந்து நடத்தலாமா? கூடாதா? என பல்வேறு ஆய்வுகளுக்கு உட்படுத்தினார்கள்.
அதன் அறிக்கை கிட்டத்தட்ட 1000 ம் பக்கம் தயார் செய்யப்பட்டது. அந்த அறிக்கை 1 வாரத்துக்குள் நீதியரசர்கள் முன்னால் கொண்டு சமர்பிக்கப்ப்பட்டது. அந்த செய்திகளும் மிகப்பிரமாண்டமாக பத்திரிக்கையில் வெளிவந்தன.
அந்த செய்திகளும் பரபரப்பை ஏற்படுத்தியது.
“தாமிரபரணி பற்றி 1000 ம் பக்கத்தில் அறிக்கை தாக்குதல். அடுத்த கட்டம் நிரந்தர தடை உத்தரவு வருமா?” என பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டன.
தாமிரபரணி ஆர்வலர்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்து நின்றனர். இந்த சமயத்தில் சந்தோசத்தின் எல்லைக்கே சென்று விட்டனர் செல்வியும் காளியும்.
தொண்டு நிறுவனத்தில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. நிரந்தரமாக தடை உத்தரவு ஒன்று வந்து விட்டால் பிரச்சனை எல்லாம் தீர்ந்துவிடும் என நினைத்தார்கள்.
ஆனால் விதி வேறு மாதிரி வேலை செய்தது.
மதுரை உயர் நீதி மன்றம் அதன் பிறகு எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை.
ஒரு காலகட்டத்தில் என்ன நடக்கிறது என்பது கூட தெரியவில்லை. யோசித்தான் காளி. “என்ன நடக்கிறது யாருமே எதுவுமே பேச மாட்டான்கிறார்கள்”.
தாத்தா சொன்னார். “கோர்ட் காரியம் என்றால் அப்படித்தான் இருக்கும்”.
அதற்காக மாதக்கணக்கில் அல்லவா அமைதியாக இருப்பார்கள். காளி மனம் நொந்து போய் கேட்டான்.
“கோர்டில் நம்ம வழக்கு மட்டும் தான் இருக்குமா? எத்தனை வழக்கு இருக்கு. தமிழ்நாட்டில் தென் பகுதியில் உள்ள வழக்கு எல்லாமே இந்த கோர்டில்தானே நடக்கும். எத்தனை சிவில் வழக்கு, எத்தனை கிரிமினல் வழக்கு உள்ளது. இது போன்ற பொதுநலவழக்கும் உள்ளது. எனவே காலம் எடுக்கத்தான் செய்யும்”.
தாத்தா குலசேகரன் சொல்ல சொல்ல அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
ஆனால் காளிக்கு மனது கேட்கவில்லை.
அன்று இரவு காளிக்கு செல்விக்கும் தூக்கம் வராமல் தவித்தனர்.
“என்ன செல்வி. இத்தனை நாள் கோர்டில் தாமதம் செய்வாங்களா?”
“அப்படித்தானே தாத்தா சொல்றாரு”.
“மத்த விசயமுன்னா வாய்தா மேலே வாய்தா போட்டு இழுத்துக்கொண்டே போவங்க. ஆனால நம்ம தாமிரபரணி கேஸ் பைனலுக்கு இல்லை வந்திட்டு. அதுக்கப்புறமும் இழுக்க வேண்டுமா?”
இருவரும் அமைதியாக இருந்தார்கள்.
காளித்தான் தொடர்ந்தான்.
“இல்லை எனக்கென்னவோ சந்தேகமா இருக்கு”.
“ஏன்?”.
“கொஞ்ச நாளா இந்த மாரியப்பனை காணோம்”.
“அவன் எங்கயாவது போயிருப்பான்”.
“அப்படி தெரியலை. எனக்கென்னவோ சந்தேகமா இருக்கு”.
“அவன் என்ன செய்வான்?”.
“தெரியலை. ஆனா என் மனசு ஏனோ கஷ்டப்படுது”.
இருவரும் அமைதியாக இருந்தார்கள்.
பாவம் அவர்கள் தன்னலம் கருதாமல் தாமிரபரணிக்காக தவமிருந்து தவ வாழ்க்கை வாழ்ந்து , தன்னை இழந்து தவிக் கிறார்கள். தினமும் நதி படும் வேதனையை தன் வேதனையாக நினைத்து வருத்துகிறார்கள். ஆனால் மற்றவர்களோ, நதியை பணம் கொழிக்கும் பொருளாக அல்லவா? பார்க்கிறார்கள்.
மறு நாள் விடிந்தது.
காளியும், செல்வியும் குலசேகரன் தாத்தாவை பார்க்க வந்தனர்.
“தாத்தா, அப்படியே மதுரைக்கு ஒரு எட்டு போயிட்டு வந்திருவோம்”.
“ஏன் காளி”.
“இல்லை. எனக்கு என்னவோ மனசுக்கு கஷ்டமாக இருக்கு. என்ன ஏதுன்னு கோர்டில போய் பார்த்துட்டு வருவோம்”.
“அதுக்கு மாரியப்பனும் வரணுமுல்லா?”.
“வேண்டாம். தாத்தா. எனக்கு டவுட்டே மாரியப்பன் மேலேத்தான்”.
“புரியலை”.
“ஆமாம் தாத்தா. கொஞ்ச நாளா அவன் நடவடிக்கை சரியில்லை”.
“சரி டவுட் இருந்தா. பாத்திற வேண்டியது தான்”.
“ஊருல யாருக்கும் தெரியக்கூடாது தாத்தா”.
“ம்”. அவன் சொல்லுவதில் நியாயம் இருப்பது போல அவனும் உணர்ந்தான்.
மறுநாள் அதிகாலை 4 மணிக்கே திருநெல்வேலி பஸ்ஸ்டாண்டு சென்றார்கள். மதுரைக்கு பஸ் ஏறினார்கள். காலை 8 மணிக்கெல்லாம் வக்கீல் வீட்டு முன்னால் போய் நின்றனர்.
வக்கீல் வெளியே வந்தார்.
“போங்க ஆபீஸ் போங்க. நான் 10மணிக்கு அங்க வருவேன்” என்றார்.
ஆபிஸ் சென்றார்கள். அங்கே அவர் வரவில்லை.
ஆபிஸ் பாய் மட்டும் இருந்தான்.
“அய்யா இங்க வரமாட்டாவ. கோர்ட்டுக்கு போயிருவாவ. வேணுமுன்னா அங்க போய் பாருங்க என்றான்.
“என்னடா இவர் அங்க இங்கன்னு அலைகழிக்காரு”.
வெளியே வந்து டீ கடையில் டீ குடித்தனர்.
அப்போது அங்கே ஒரு பெரியவர் நின்றார். “என்ன திருநெல்வேலியில இருந்து வந்திருக்கீங்களா?”
“ஆமாம் அய்யா”.
“தாமிரபரணி கேஸா”
“ஆமாமய்யா”.
“நீங்க வழக்கு போட்டவரா? இல்லாட்டி?” என இழுத்தார்.
“நாங்க துணையா நின்னவங்க”.
“ம். உங்களுக்கு விசயமே தெரியதா?”
“என்ன அய்யா?”.
“இப்போ தமிழ்நாட்டுல பெரிய அநியாயம் நடக்கு”.
ஒன்றும் புரியாமல் விழித்தனர்.
“எங்க மணல் அள்ளுனாலும் ஒரு கும்பல் போய் கேஸ் போடும். அதுக்க பொறவு மணல் அள்ளுறவீங்க அவங்க கிட்ட போய் சமரசம் பேசுவாங்க. உடனே அவங்க கேஸை வாபஸ் வாங்கிட்டு. அவங்க கூட பார்டனரா மாறிடுவாங்க”.
“என்ன சொல்றீங்க”.
“ம். அப்படித்தான் தமிழ்நாடு புறாவும் நடக்கு”.
“ஆனால எங்க ஊருல அப்படி நடக்காது”.
“எப்படி சொல்றீங்க?”.
அமைதியாக இருந்தான் காளி.
“உங்க ஊருல தான் மாரியப்பன்னு ஒரு ஆளு வந்து பேசி சமரசம் பண்ணிட்டு போயிட்டாரு. இப்போ அவன் மணல் அள்ளுறவங்க கூட ஒரு பாட்னரு”.
காளி அதிர்ந்தான்.
“என்ன அய்யா சொல்றீங்க”.
“உண்மை இது தான் நடக்கு”.
அவர் எழுந்து சென்றார்.
“தாத்தா என்ன சொல்லிட்டு போறாரு. அந்த ஆளு”.
“அவசரப்படாத எனக்கு தெரிஞ்ச ஒரு வக்கீல் இருக்காரு. அவருக்கு கிட்ட போய் இந்த கேஸ் வாபஸ் ஆகி இருக்கான்னு மட்டும் பார்ப்பபோம்”.
இருவரும் அங்கிருந்து ஒரு ஆட்டோவில் ஏறினார்கள். மதுரை உயர்நீதி மன்றத்தில் அமர்ந்து கொண்டிருக்கும் போதே அந்த வக்கீல் எதிரே வந்தார்.
தாத்தாவை பார்த்தவுடன் கிட்டே வந்து குசலம் விசாரித்தார்.
தாத்தா வழக்கை பற்றி கேட்டார்.
சிரித்தார் வக்கீல்.
“என்ன சார்?”.
“அந்த வழக்குத்தான் வாபஸ் ஆயிட்டே”.
“என்ன சொல்றிங்க”.
“ஆமாம் அய்யா. போன மாசமே அந்த வழக்கை போட்டவரு வாபஸ் வாங்கிட்டு போயிட்டாரு”.
காளி மனம் நொந்து போனான்.
“தாத்தா வாங்க ஊருக்கு போவோம்”.
இருவரும் பஸ் ஏறி உட்கார்ந்தார்கள்.
அமைதியாக ஊர் வந்து சேர்ந்தனர்.
“மாரியப்பனிடம் சென்று என்னவென்று கேட்போம் வாருங்க” என்றான் காளி.
தாத்தா சொன்னார். “செத்த பயலுக்கிட்ட என்ன கேள்வி. போயி வேலையை பார்க்க பாப்போம்”.
தாத்தா அவனை சும்மா விடக்கூடாது.
“என்ன செய்ய சொல்ற. அவன் தான் நரவலை தின்னுட்டானே”.
இருவரும் கோபத்துடன் அங்கிருந்து கிளம்பினர். ஆனால் மாரியப்பன் வேறு ஒரு திட்டத்துடன் இருந்தான்.
அந்த திட்டம் தான் என்ன?
( நதி தொடர்ந்து பயணிக்கும்)


