தமிழகத்தில் எந்தவொரு ரேஷன் கார்டும் முடக்கப்படாது எனதமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
6 மாதங்களாகப் பொருட்கள் வாங்காத ரேஷன் கார்டுகளை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், “தமிழகத்தில் எந்தவொரு ரேஷன் கார்டும் முடக்கப்படாது; தொடர்ந்து அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும்” எனத் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த 6 மாதங்களுக்கு மேலாக ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்காத குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் ‘அந்தியோதயா அன்ன யோஜனா’ கார்டுதாரர்களுக்குப் பொருட்கள் வழங்குவதைக் அக்டோபர் 1 (இன்று) முதல் தற்காலிகமாக முடக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் முன்னுரிமை ரேஷன் கார்டு மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா கார்டுதாரர்களின் e-KYC (விரல் ரேகை / பயோமெட்ரிக்) சரிபார்ப்பு பணிகள் 96.69 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. கூட்டுறவு மற்றும் உணவுத் துறை சார்பில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் மூலம் ஜூலை மாதத்தில் 95.44 சதவீதமாக இருந்த சரிபார்ப்பு, தற்போது 96.69 சதவீதமாக உயர்ந்துள்ளது. இச் சிறப்பு முகாம்கள் மூலம் 4,49,663 பயனாளிகள் பயன் பெற்றுள்ளனர்.
இது குறித்துத் தமிழக உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது: “தமிழகத்தில் எந்தவொரு ரேஷன் கார்டுதாரருக்கும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதை நிறுத்தவோ அல்லது தடை செய்யவோ கூடாது. தகுதியுள்ள அனைவருக்கும் தொடர்ந்து பொருட்கள் வழங்கப்பட வேண்டும் என அனைத்து வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் உதவி கமிஷனர்களுக்குத் தெளிவான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்னும் e-KYC பணிகளை மேற்கொள்ளாத கார்டுதாரர்கள், வழக்கம்போல ரேஷன் கடைகளுக்குப் பொருட்கள் வாங்கச் செல்லும்போது, அங்கேயே கைவிரல் ரேகை அல்லது கண்கருவிழி (Iris) சரிபார்ப்பு மூலம் தங்களது e-KYC விவரங்களை விரைந்து பதிவேற்றம் செய்து கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


