முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலுக்கு தினம் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். மேலும் திருவிழா நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை தருவார்கள்.
அமாவாசை பௌர்ணமி தினங்களில் திருச்செந்தூர் கடற்கரை பகுதியில் கடல் உள்வாங்கி காணப்படுவது வழக்கம். இந்த நிலையில் நாளை அமாவாசை உள்ள நிலையில் இன்று காலை முதல் கடல் சுமார் 50 அடி தூரத்துக்கு உள்வாங்கி காணப்படுகிறது.
மேலும் அதிக அளவில் அலைகள் இல்லாமல் கடல் அமைதியாக உள்ளது. திருச்செந்தூர் கடற்கரையில் நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கி காணப்படுகிறது. கடலில் குளிக்க வந்த பக்தர்கள் ஆபத்தை உணராமல் கடல் உள்வாங்கி உள்ளதால் கடலில் உள்ள பாசி படிந்த பாறைக்கு மேல் ஏறி விளையாடுவது, செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். மேலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள கடற்கரை பணியாளர்கள் பக்தர்களை பாதுகாப்பாக குளிக்கும்படி அறிவுறுத்தி வருகின்றனர்.